பாலு மகேந்திரா – ‘மறுபடியும்’ வாருங்கள்…

director balumahendra photo

எத்தனையோ இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வருகிறார்கள், போகிறார்கள்…ஆனால், ஒரு சிலர் மட்டுமே சினிமாவை அவர்களது வாழ்க்கைக்கும் மேலாக நேசிக்கிறார்கள்.

பணம் சம்பாதிப்பதற்கும், பெரும் புகழை அடைவதற்கும், அப்படியே…நாட்டையே பிடிக்க வேண்டும் என்ற கனவுடனும் பலர் திரிந்து கொண்டிருக்க, சினிமாவை சினிமாவுக்காக மட்டுமே பயன்படுத்தியவர்கள் ஒரு சிலர்.

அந்த ஒரு சிலரில் ஒருவர் காமிராக் கவிஞன் பாலு மகேந்திரா.

சிறு வயதில் அது என்னமோ தெரியாது, சினிமா மீது அப்படி ஒரு காதல். கடைகளில் விற்கும் துண்டுத் துண்டு பிலிம்களை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு அட்டையில் அந்த ஃபிலிமை சொருகி, வெளியிலிருந்து கண்ணாடி மூலமாக சூரிய ஒளியை அதில் செலுத்தி, அதற்கு முன் பூதக் கண்ணாடியை வைத்து , சுவற்றில் தெரியும் அந்த பெரிய பிம்பத்தைப் பார்த்து வியந்த நாட்கள் அவை.

அந்த காலகட்டத்தில் ஒரு நாள் உறவினர்களோடு ‘அழியாத கோலங்கள்’ படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் வந்த டீச்சரும், அந்த மாணவர்களும் இன்று நினைத்துப் பார்த்தாலும் கண்முன் நிழலாடுகிறது. அதிலும், கடைசி காட்சியில் அந்த குண்டுப் பையன் மனோகர் இறந்து போக, மண்தரையில் அவன் அணிந்த மூக்குக் கண்ணாடிக்கு ஒரு க்ளோஸ் அப் வைத்திருப்பார். அந்த காட்சியில் அழுததற்கு இரண்டு கண்கள் போதாது.

அதன் பின் ‘மூன்றாம் பிறை’ படத்தைப் பார்த்து ஒளியின் மீதும் , ஊட்டியின் மீதும் அப்படி ஒரு காதல். எப்போது, அந்த ஊட்டியைப் பார்ப்போம் என்ற பேராவல். 15 வருடங்கள் கழித்துத்தான் அதை பார்க்க முடிந்தது என்பது வேறு கதை. ஊட்டியில் இருப்பவர்களே ஊட்டியை அவ்வளவு அழகாக ரசித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அதன் பின் காமிரா மீது காதல் கொண்டு, அவர் போலவே, ‘பேக் கிரவுன்ட்’ஐ ‘அவுட்’ அடிக்க வைத்து ஷட்டர் ஸ்பீடை மாற்றி, அவரைப் போலவே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நண்பனுடன் எத்தனை ‘ரோல்’களை வீணாக்கியிருப்போம். கடைசிவரை அவரைப் போல எடுக்க முடியாமல் போனது.

‘வீடு’ படத்தைப் பார்த்த போது, எப்படி இப்படியெல்லாம் ஒரு படத்தை  இயக்க முடிகிறது என்று வியந்து போயிருக்கிறேன்.

‘மறுபடியும்’ படத்தில் வந்த காதல் போல் கூட வாழ்வில் வருமா ?  “ஆசை அதிகம் வச்சி…மனசை அடக்கி வைக்கலாமா…” என கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து அதிகமாக ஆட்டம் போட்ட பாடல்…

இளையராஜா இல்லையென்றால் படமே இயக்க மாட்டேன் என்ற தீவிரமான ராஜா ரசிகர் என்பதும் அவர் மீது ஒரு தனி பாசத்தை வளர்த்தது.

சினிமாவைப் படிக்க ஆரம்பித்த போது மீண்டும் ‘மூன்றாம் பிறை’ படத்தைப் பார்த்த போது, இன்னும் பல விஷயங்கள் புலப்பட்டன.

அதெல்லாம் ஒரு கனாக்காலம். இன்று சினிமா தடம் மாறி, தட்டுத் தடுமாறினாலும், நான் மாற மாட்டேன் என இன்றைய தலைமுறைக்காக ‘தலைமுறைகள்’ படத்தைக் கொடுத்த அவரது பேராவலை என்னவென்று சொல்வது.

கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து, ‘ஷோபா, அர்ச்சனா, மௌனிகா,  ஈஸ்வரி ராவ்’ என மண் மனம் கொண்ட நாயகியரை நடிக்க வைத்து நம்மை ஈர்த்தார்.

அவர் படங்களில் இதுவரை நடித்த நடிகர்களை விட அவர்களது கதாபாத்திரங்களே பிரதானமாகத் தெரிந்திருக்கிறது.

70 வயது தாத்தாவையும் ஹீரோவாக்கிய துணிச்சல் யாருக்கு வரும்.

கடைசி காலத்திலேயே உங்கள் ‘தொப்பி’ இல்லாத முகத்தை ‘தலைமுறைகள்’ மூலம் பார்க்க நேர்ந்தது. உங்களை மறைத்துக் கொண்டு சினிமாவை முன்னிறுத்தியிருக்கிறீர்கள்.

எங்களைப் போன்ற ரசிகர்கள் உள்ளவரை எங்கள் நெஞ்சில் குடியிருப்பீர்கள்…

உங்கள் கண்களும், இதயமும்….உங்கள் படங்களின் வாயிலாக எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்…

‘மறுபடியும்’ வாருங்கள்…

Read Previous

இயக்குனர் பாலு மகேந்திரா மறைவு…

Read Next

நயன்தாரா எனது தோழி – சிம்பு