லட்சுமி மேனன்… கேரள வரவாக இருந்தாலும் தமிழ் நாட்டு ரசிகர்களின் மனதில் பக்கத்து வீட்டுப் பெண்ணாக இடம் பிடித்து விட்டார்.
“சுந்தர பாண்டியன், கும்கி, குட்டிப் புலி, பாண்டிய நாடு” அனைத்துமே மாபெரும் வெற்றிப் படங்கள். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து ராசியான நடிகை என பெயர் வாங்கியதால் தற்போது நான்கு தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன்’, சித்தார்த் ஜோடியாக ‘ஜிகர்தண்டா’, கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘சிப்பாய்’, விமல் ஜோடியாக ‘மஞ்சப்பை’, விஜய் சேதுபதியுடன் விரைவில் ஆரம்பமாகும் ‘வசந்த குமாரன்’ ஆகிய படங்களிலும், மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் திலீப் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
அடுத்தடுத்து இந்த படங்கள் வெளிவர உள்ள நிலையில் ‘ஜிகர்தண்டா’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று நாம் சந்தித்தோம்.
அதற்கு முந்தின நாள் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வராமல் போனதன் காரணத்தைச் சொன்னார். கேரளாவில் 11ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகி பரீட்சைக்கு சென்று விட்டதால், இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.
படிப்பு, காதல், முத்தக் காட்சி, கல்யாணம், என எதைப் பற்றிக் கேட்டாலும் கொஞ்சமும் யோசிக்காமல் ‘பளிச்’ என்று பதிலளித்தார் இந்த 11ம் வகுப்பு மாணவி.
“முத்தக் காட்சியில நடிக்கும் போது மட்டும் நான் ஸ்கூல் பொண்ணாச்சேன்னு சொல்றவங்க, மத்த நேரத்துல என்னை 28 வயசு பொண்ணு மாதிரி இருக்கன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்” என வருத்தப்பட்டார்.
ஒரே சமயத்துல ‘நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப் பை, சிப்பாய்’ வெவ்வேறு விதமான படங்கள், வேற வேற ஹீரோக்கள்…மாறி மாறி நடிக்க கஷ்டமா இல்லையா ?
நான் இயக்குனர்களின் நடிகை, அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் செய்யறேன். படத்துல என் கேரக்டர் என்னமோ அதுக்குத் தகுந்த மாதிரி அந்தந்த கேரக்டருக்கு ஏற்றபடி என்னை மாத்திக்குவேன்.
பிஸி நடிகையாயிட்டீங்க, ஸ்கூலுக்கும் போறீங்க…படிக்க அவ்வளவு ஆசையா ?
நடிகையாவன்னு நான் எதிர்பார்க்கலை. அதுவா வாய்ப்பு வந்தது. படிப்பை விடலாம்ம்னு சில நேரம் நினைப்பேன், ஆனால் நடிப்புலாம் எவ்வளவு நாளைக்கு கேரண்டின்னு தெரியாது, அப்புறமா யாராவது என்னை படிச்சிருக்கன்னு கேட்டால் சொல்லணும் இல்லை. கேரளாவுல படிப்புக்கு ரொம்பவும் முக்கியமுண்டு, அதான் தொடர்ந்து படிச்சிட்டிருக்கேன்.
நீங்க ஆசைப்படற மாடர்ன் டைப் கேரக்டர்ஸ் வரவே மாட்டேங்குதே ?
ரசிகர்களுக்கு என்னை ஹோம்லி கேரக்டர்ல பார்க்கிறதுதான் பிடிக்குது. ரசிகர்களே என்னை மாடர்ன் டிரஸ்ல ரசிக்க மாட்றாங்க. பார்க்கிறவங்கள்லாம் உங்களுக்கு பாவாடை, தாவணி தான் பொருத்தமா இருக்குன்னு சொல்றாங்க. ரசிகர்களுக்காகத்தானே நாம நடிக்கிறோம். அவங்களுக்கு பிடிக்கிற மாதிரிதானே வரணும்.
‘நான் சிகப்பு மனிதன்’ல கொஞ்சம் மாடர்னா நடிக்கிறேன். அதுவும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்கீங்களா…?
ஃபேஸ்புக்ல இருக்கிற அக்கவுண்ட் என்னோடது இல்ல. வேற ஒரு தனிப்பட்ட அக்கவுண்ட் வச்சிருக்கேன். ஆனால், ரசிகர்கள் கூடலாம் அத ஷேர் பண்ணிக்கிறது இல்லை. உறவினர்களுக்காகவும், நணபர்களுக்காகவும் மட்டுமே அதை யூஸ் பண்றேன். ட்விட்டர்ல நான் இல்லை.
‘நான் சிகப்பு மனிதன்’ படத்துல விஷால் கூட முத்தக் காட்சில நடிச்சிருக்கீங்களாமே , அது உண்மையா…பொய்யா ….?
‘நான் சிகப்பு மனிதன்’ படத்துல முத்தக் காட்சில நடிக்கலன்னு நான் ஏன் பொய் சொல்லணும். படத்துல அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கு. அது என்னோட புரொபஷன். அதை நான் புரொபஷனலிசமாதான் பார்க்கிறேன்.
சும்மா வந்து ‘கிஸ்’ சீன்ல நடிக்கணும்னா நான் பண்ண மாட்டேன். அந்த கதைக்குத் தேவைப்பட்டுச்சின்னாதான் பண்ணுவேன்.
படத்தோட கதைய சொல்லும் போதே எனக்கு அப்படி ஒரு காட்சி இருக்குன்னு சொன்னாங்க. முத்தக் காட்சியில பிடிச்சிதான் நடிச்சேன். யாரும் அப்படி ஒரு காட்சியில நடிக்கணும்னு எந்த அழுத்தமும் கொடுக்கலை.
படத்தோட கதையில தேவைப்பட்டுச்சுன்னா முத்தக் காட்சில நடிக்கிறதுல தயக்கமில்லை.
சரி படத்துல அப்படி எத்தனை காட்சிகள் இருக்கு ? ன்னு கேட்டதுக்கு ரொம்பவே வெட்கப்பட்டார் லட்சுமி மேனன். அநியாயத்திற்கு சிரித்து, “அதெல்லாம் சீக்ரெட் , ஒரு காட்சின்னு சொல்றத விட இரண்டு, மூணு சீன் இருக்குன்னு சொன்னால் படத்துக்குப் போவீங்க இல்லை,” என பளிச்சென்று பதில் சொன்னார்.
படத்துல இனியாவுக்கும் முக்கியத்துவம் இருக்காமே ?
ஆமாம், படத்துல இனியாவுக்கும் நல்ல முக்கியத்துவம் இருக்கு. ஆனாலும், படத்தோட கதை என்னை சுத்திதான் செல்லும். ஒரு ஸ்வீட் கேரக்டர். இதுக்கு மேல கதைய பத்திக் கேக்காதீங்க…ப்ளீஸ்…
நீங்க விஷாலை காதலிக்கறதா சொல்றாங்களே…
விஷால் சாரை நான் லவ்லாம் பண்ணலை. அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அந்த நட்பை நான் கெடுத்துக்க விரும்பலை. இண்டஸ்ட்ரில எனக்கு யாரு பிரண்ட்ஸ்னு கேட்டீங்கன்னா, விஷால் அப்புறம் கௌதம் கார்த்திக் இவங்க ரெண்டு பேருதான்…
எனக்கு காதல்ல விருப்பம்லாம் இல்லை. கல்யாணம் பண்ணாம கூட இருக்கலாம். நடந்தால் நடக்கலாம், ஆனால், இப்போதைக்கு எதுவுமில்லை. அப்படி ஏதாவது ஒண்ணு வந்தால், கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லுவேன்,” என்றார்.
முதல் நாலு படங்கள் வெற்றி பெற்ற மாதிரியே அடுத்தடுத்த படங்களும் வெற்றி பெறட்டும் என்ற வாழ்த்தோடு விடைபெற்றோம்.
