‘ஆயிரத்தில் ஒருவன்’ மறு வெளியீடு – முதல்வர் வாழ்த்து

aayirathil oruvan 1965 news

திவ்யா பிலிம்ஸ் நிறுவனம்  எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தினை ‘ரெஸ்டோரஷன்’ (Restoration), ‘டிஐ, கலர் கரெக்ஷன், (DI & Color Correction)’ ஆகியவைகளைச் செய்து சினிமாஸ்கோப்பில் 14ம் தேதியன்று வெளியிடுகிறது.

திவ்யா பிலிம்ஸ் தயாரிப்பாளர் சொக்கலிங்கத்தின் இந்த அரிய முயற்சியைப் பாராட்டி தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார்.

அந்தத வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வியல் நெறிகளையும், புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

எனவேதான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆய்வாகளர்களும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள், வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் பாடங்கள் என்று போற்றுகின்றனர்.

புரட்சித்தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை வீரர்களாக மாற்றிக் கொள்கிற சம்பவங்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேர்மையையும் நிலை நாட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார். அந்த மாபெரும் வெற்றிப்படத்தில் நான் முதன்முதலாக புரட்சித்தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்  வெளியிடப்பட்ட போது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து, 14.03.2014 முதல் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்த பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்,” என முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்து பற்றி திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் கூறுகையில், “

“என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை இன்று எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன். இதன் வாயிலாக அம்மா அவர்களுக்கு என்னுடைய பணிவான நன்றியினையும் , வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Read Previous

மதுமிதா இயக்கும் ‘மூணே மூணு வார்த்தை’…

Read Next

இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்