
தயாரிப்பாளரும், கவிஞருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகனான சுப்பு பஞ்சு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகாவின் ‘அரசி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார்.
அந்த சீரியலின் மூலம் அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றவர், 2008ம் ஆண்டு வெளிவந்த ‘சரோஜா’ படத்தின் மூலம் வெள்ளித் திரையிலும் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டார்.
தொடர்ந்து “மங்காத்தா, கலகலப்பு, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, சென்னையில் ஒரு நாள், சேட்டை, பட்டத்து யானை, தலைவா, நவீன சரஸ்வதி சபதம், பிரியாணி, சமீபத்தில் வெளிவந்த நிமிர்ந்து நில்’ உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் அவருடைய அருமையான குரல் மூலம் ‘வாய்ஸ் ஆக்டர்’ ஆகவும் சிவாஜி, கந்தசாமி படங்களில் பின்னணிக் குரல் கொடுத்து ‘எங்கேயோ கேட்ட குரல்’ மாதிரி இருக்கிறதே என அவரைப் பற்றி பேச வைத்தார். ‘சிவாஜி’ படத்தில் வில்லனாக நடித்த சுமன், ‘கந்தசாமி’ படத்தில் வில்லனாக நடித்த முகேஷ் திவாரிக்கும் அவர்களே பேசியது போன்ற பின்னணிக் குரலைக் கொடுத்தார்.
தற்போது, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், இந்தியா முழுவதும் மே 1ம் தேதி வெளிவர இருக்கும் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ ஹாலிவுட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ‘ஜேமி ஃபாக்ஸ்’-க்கு (Jamie Foxx) பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
2012ம் ஆண்டு வெளிவந்த ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ படத்தின் அடுத்த பாகமாக வெளிவர உள்ள ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ திரைப்படம் உலக அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் திரைப்படம் 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி மற்றும் ஆரோ 11.1, டால்பி அட்மாஸ் தொழில்நுட்பங்களில் திரையிடப்பட உள்ளது.
‘மிகப் பிரம்மாண்டமான ஹாலிவுட் படமான ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்கு பின்னணிக் குரல் கொடுத்தது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இந்த படம் அமையும்.
ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கேற்ப ஏற்ற, இறக்கங்களுடன் (Variations) இருக்கிற என்னுடைய பின்னணிக் குரலும் இந்தப் படத்தில் பேசப்படும் விதத்தில் இருக்கும், ” என ஹாலிவுட் படத்தில் குரல் கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் சுப்பு பஞ்சு.