தின்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் நாசர், பேபி சாரா, கௌசல்யா மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வரும் படம் ‘சைவம்’.
சமீபத்தில் இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பில் , நா.முத்துகுமார் இயற்றிய ‘அழகே அழகே…’ என்ற வரிகளுடன் ஒரு பாடல் பதிவானது. பதிவு அறைக்கு பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் வந்து இருந்தார். ஆனால் பாடியது அவர் இல்லை. மழலை மாறாத ஒரு சின்னக் குயில். அந்தக் குயிலுக்கு பாடல் பயிற்சி கொடுக்கத்தான் உன்னி கிருஷ்ணன் வந்திருந்தார்.
அந்த குயிலின் பெயர் உத்ரா உன்னி கிருஷ்ணன் . பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணன் மகள்தான் உத்ரா உன்னி கிருஷ்ணன்.
“இந்த வயதில் இப்படி ஒரு ஆழ்ந்த இசை ஞானத்தை நான் பார்த்ததே இல்லை. பயிற்சியாலோ , பாரம்பரியதாலோ, மட்டும் இசை ஞானம் வருவதில்லை, அது ஒரு வரம் என்பதற்கு உதாரணம் உத்ரா உன்னி கிருஷ்ணன்தான்.
குழந்தை நட்சத்திரம் சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் விஜய் கேட்க அதற்கான தேடல் ஆரம்பித்தது. தேடும் போது கிடைத்த பொக்கிஷம் உத்ரா. உத்ராவின் குரலில் சாராவின் அபிநயத்தில் ‘அழகே அழகே…’ பாடல் மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். “இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் , இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல,” என்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
‘அழகே அழகே…’ பாடலின் சிறு முன்னோட்டம் இன்று வெளியிடப்பட உள்ளது.
‘சைவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடை பெற உள்ளது .