எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என பலர் இருக்கிறார்கள், இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என ஒரு சிலரே நினைக்கிறார்கள். அந்த ஒரு சிலரில் இயக்குனர் ஞான.ராஜசேகரன் முக்கியமானவர்.
மத்திய அரசின் பெரிய பதவி ஒன்றில் இருந்தவர், சினிமா மீதான ஆர்வத்தில், தொடர்ச்சியாக படங்களை இயக்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்று விட்டாராம்.
தமிழ்ச் சமூகம் மறந்து போன கணித மேதை ராமானுஜன் பற்றி வாழ்க்கை வரலாற்றை அவரது இதற்கு முந்தைய படைப்புகளான ‘மோக முள், பாரதி, பெரியார்’ படங்களை விட இன்னும் பிரமாதமாக இயக்கியிருக்கிறார் ஞான.ராஜசேகரன்.
ரமேஷ் விநாயகம் இசையமைக்க அபிநவ் வாடி, பாமா, சுகாசினி மணிரத்னம், நிழல்கள் ரவி, ஒய்.ஜி. மகேந்திரா மற்றும் பல இந்திய நடிகர்களுடன், 120 ஆங்கிலேய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ராமானுஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிநவ் வாடி, மறைந்த நட்சத்திர ஜோடியான ஜெமினி கணேசன் – சாவித்ரி ஆகியோரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ராமானுஜன்’ படத்தின் சில காட்சிகளை நமக்கு திரையிட்டுக் காட்டினார் இயக்குனர். கும்பகோணம், லண்டன் என காட்சிகள் திரையில் விரியும் போது, ராமானுஜன் வாழ்ந்த அந்த 1899 முதல் 1920 வரையிலான காலகட்டங்களுக்கே நம்மை அழைத்துப் போகிறார்.
‘ராமானுஜன்’ பற்றி அவ்வளவு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இன்றும் உலகமே வியந்து பார்க்கும் ஒரு கணித மேதையைப் பற்றி பேச ஆரம்பித்தால், அவ்வளவு ஆர்வமாகப் பேசி நமக்குத் தெரியாத பல தகவல்களை தெரிவிக்கிறார்.
அதில் ஆச்சரியமான ஒன்று,
இன்று நாம் நினைத்த மாத்திரத்தில் பணத்தை எடுக்கும் ‘ஏடிஎம்’ தொழில்நுட்பம், மெயில் போன்ற மற்ற விஷயங்களுக்கு பயன்படும் ‘பாஸ் வேர்ட்’ ஆகியவை ராமானுஜன் உருவாக்கிய கணிதத்தின் அடிப்படையில்தான் என்ற ஆச்சரியத் தகவலை சொல்லி நம்மை மிகவும் வியக்க வைக்கிறார்.
இவை ‘கிரிப்டாலஜி’ (மறையீட்டியல்) என்ற கணிதம், கணினியியல், பொறியியல் ஆகியவை சேர்ந்த ஒரு இயல் ஆகும்.
அது மட்டுமல்ல ‘மார்க் தீட்டா’ என்ற ராமானுஜன் கண்டு பிடித்த ஒரு கணிதத்தை, அவர் எப்படி ஒரே வழியில் விடை கண்டுபிடித்தார் என்பதை இந்த உலகம் கண்டுபிடித்தது 2012ம் ஆண்டில்தான் என்கிறார்.
“ராமானுஜன் பற்றி இங்கு பலருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவருடய வாழ்க்கையைப் பற்றிய படம்தான் இது. ஒரு ஜீனியஸை நம்ம சொசைட்டி எப்படி பார்த்ததுங்கறதுதான் இந்த படம்.
நாம இன்னும் கூட நம்ம வீட்டுல ஒரு ஜீனியஸ் இருந்தாலோ, அதைப் பத்தி பெருசா எடுத்துக்கிறதுல்ல. நம்ம ஆசையைத்தான் அவங்க மேல திணிக்கிறோம்.
அவங்ககிட்ட இருக்கிற உண்மையான ஆசை என்ன திறமை என்ன அப்படிங்கறத நாம பார்க்கிறதேயில்லை. ஆனால், நம்மள்ல இருந்து மேற்கத்திய நாடுகள் வித்தியாசமா இருக்கிறான்.
ஒரு திறமையோட தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி மேற்கத்திய நாடுகள் கவலைப்படறதேயில்லை. அவனை ஒரு மேதையாதான் பார்க்கிறாங்க. ஆனால், இங்க ஒரு திறமைசாலி இருந்தால் அவனோட தனிப்பட்ட வாழ்க்கை, ஒழுக்கம் அதைத்தான் பார்க்கிறாங்க. அவன் திறமையைப் பத்தி கவலைப்படறதேயில்லை.
உலகத்திலேயே மிகப் பெரிய ஜீனியஸா வர்ற ஆட்கள் இந்தியாவுலதான் பிறக்கிறதா சொல்றாங்க. ஆனால், அந்த திறமைசாலியை நாம வளர்த்து விடறதேயில்லை. நாஸா-வுல 30ல இருந்து 60 சதவீதம் வரை இந்தியர்கள்தான் இருக்கிறதா சொல்றாங்க , ” என பெரிய ஆதங்கத்துடன் கவலைப்படுகிறார் இயக்குனர் ஞான. ராஜசேகரன்.
இன்னும் பல தகவல்கள் ராமானுஜனைப் பற்றி இருக்கிறது. அவையணைத்தையும் தெரிந்து கொள்ள, நம்மில் ஒருவன் இந்த உலகம் போற்றும் மேதையாக இருககும் ‘ராமானுஜன்’ படம் ஒரு சில வாரங்களில் வெளியாக உள்ளது.
தங்கள் பிள்ளைகளை புத்திசாலிகளாக வளர்க்க ஆசைப்படும் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டிய படம்…