கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒரு நடிகை அவருடன் ஜோடி சேர்கிறார்.
ஆங்கிலேய நடிகையான லாரன் ஜே இர்வின் என்ற நடிகை ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். சுதந்திர காலத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வரும் ரஜினி கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஜோடியாம்.
இது சம்பந்தமாக லாரன் ஜே இர்வின் ட்விட்டரில் தகவலைத் தெரிவித்துள்ளார்.
“ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர், மிகவும் ஆதரவானவர். நான் முதல் காட்சியில் நடித்து முடித்ததும் என்னை வந்து பாராட்டினார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்.
படத்தைப் பற்றி நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்னுடைய கதாபாத்திரத்தை படம் வெளியானதும் நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
லாரன் ஜே இர்வின் இங்கிலாந்து நாட்டிலுள்ள லிவர்பூல் நகரில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.
எமி ஜாக்சனைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆங்கிலேய நடிகை தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
இன்னும் கொஞ்ச நாளில் ஹாலிவுட்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விடும் போல…