‘மங்காத்தா, ஆரம்பம், வீரம்’ ஆகிய படங்களில் நரைத்த தலைமுடியுடன் நிஜமான தோற்றத்தில் மட்டுமே நடித்தார் அஜித். மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் வெள்ளை முடிக்கு ‘டை’அடித்துக் கொண்டு நடிப்பதை சமீப காலமா அவர் தவிர்த்து வந்தார்.
அவருடைய ரசிகர்கள் பலர் கேட்டும் கூட தன்னை மாற்றிக் கொள்ளாமலே இருந்தார். இனி, அவர் இப்படிப்பட்ட தோற்றத்தில்தான் நடிப்பார் என செய்திகளும் வெளியாகின.
ஆனால், அதில் இப்போது ஒரு சிறு மாற்றம். அஜித் மீண்டும் இளமையான தோற்றத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில்தான் அப்படிப்பட்ட தோற்றத்தில் நடிக்கப் போகிறார். 20 வயது இளைஞராக ஒரு தோற்றம், 40 வயது நடுத்தர மனிதராக மற்றொரு தோற்றம் என அஜித் இரு கெட்டப்புகளில் நடிக்கிறாராம்.
அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை அஜித் மேற்கொண்டு வருகிறாராம். உடல் இளைத்த பின் அந்த இளமை தோற்றத்திற்கான படப்பிடிப்பு நடக்க உள்ளது. அந்த கதாபாத்திரத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.
அஜித்தை மீண்டும் இளமையான தோற்றத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்க உள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.