24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீமராஜா’.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பொன்ராம், சிவகார்த்திகேயன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ‘சீமராஜா’ படம் பற்றி படத்தின் இயக்குனர் பொன்ராம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“சீமராஜா’ ஒரு ராஜா பற்றிய கதை. ராஜாவாக இருந்தவர்கள் இந்தக் காலத்தில் எப்படியிருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
ராஜவம்சம் ஆக இருந்தவர்கள் இன்னும் அதே மாதிரியாக ராஜா, ராணி என்றே வாழ்ந்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன்தான் படத்தில் ‘சீமராஜா’. சீமராஜா கதை எழுதும் போது மனதில் யாரும் இல்லை. ஆனால், கதையை எழுத, எழுத சிவகார்த்திகேயன் அதற்குள் வந்துவிட்டார்.
சுதந்திர தேவி என்ற சிலம்பம் ஆசிரியர் கதாபாத்திரத்தில் சமந்தா. இந்தப் படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொள்ள மூன்று மாதம் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் அப்பாவாக நெப்போலியன், படத்தின் வில்லியாக சிம்ரன் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா எனக்கு அண்ணனைப் போன்றவர். அவருடைய 24 ஏஎம் ஸ்டுடியோ ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தவர். சூப்பரான குணம் கொண்டவர் ராஜா,” என்கிறார் இயக்குனர் பொன்ராம்.
நேற்று, ‘சீமராஜா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாரேன்…வாரேன்…சீமராஜா’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீடு மதுரையில் ஆகஸ்ட் 3ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.