ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பில் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநிலங்களில் மட்டுமே படமாகி வரும் தமிழ்ப் படமான ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் இரண்டு முறை தடைபட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, ராமோஜி ராவ் பிலிம் சிட்டி அருகே உள்ள அஞ்சப்பூர் என்ற கிராமத்தில் உள்ள ஏரியில் படப்பிடிப்புக்காக சில கெமிக்கல்களைக் கலந்து அசுத்தப்படுத்தியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் படப்பிடிப்பு தடைபட்டது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் லிங்கனமக்கி அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது சுற்றுப் புறச் சூழலைக் கெடுக்கும் விதத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுப் பொருட்கள் என பலவற்றை அணைப் பகுதியில் அப்படியே போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தக் கூடாதென ஆட்சியாளர்களிடம் மனு அளித்தனர்.
‘லிங்கா’ படத்தின் கதையே ஒரு அணையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைதான். அப்படிப்பட்ட கதை கொண்ட படத்தில் ஒரு அணையை படப்பிடிப்பிற்காக இவர்கள் அசிங்கப்படுத்துவது சரியா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.
கோவில்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள் பலவற்றிற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தால் இப்படித்தான் அசுத்தப்படுத்துகின்றனர் என்று பொதுவாகவே பொதுமக்களிடம் ஒரு கோபம் இருக்கிறது. அந்த கோபமும் நியாயமானதுதான்…
‘லிங்கா’ படத்தின் முக்கியஸ்தர்களான இயக்குனர் ரவிக்குமாரும், ரஜினிகாந்தும் இனி மேலாவது இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வார்களா… ?