சங்கர் பிரதர்ஸ் மற்றும் எம்.எஸ்.ஜி மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஜம்போ 3டி’. இந்திய – ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இப்பத்தை ஹரி – ஹரீஷ் இயக்குகிறார்கள்.
தமிழ்த் திரைப்பட உலகில் 3D முறையில் வெளி வரும் படங்களுக்கு சமீப கால முன்னோடியாக இருந்தது ‘அம்புலி’ திரைப்படமாகும். அந்தப் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஹரி -ஹரிஷ் தங்களது அடுத்த படமான ‘ஆ’ படத்தின் வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அதே வேளையில் தங்களது ‘ஜம்போ 3D’ படத்தின் துவக்க விழாவை திரைஉலக பிரபலங்கள் சூழ கொண்டாடினர். இப்படத்தில் ‘அம்புலி’ ‘ஆ’ ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ள கோகுல் நாயகனாக நடிக்க அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பேபி ஹம்சிகா ஹரி.
தொண்ணூறு சதவீதம் ஜப்பான் நாட்டில் படமாக்கபட உள்ள ‘ஜம்போ 3 D’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஹரி கூறுகையில் ‘தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரத்தின் பின்னணியை ஜப்பானிய மக்கள் திரைப் படங்கள் மூலம் பெரிதளவுக்கு அறிந்து வைத்து உள்ளனர். தமிழ்ப் படங்களுக்கு அங்கே பிரத்தியேகமாக ஒரு மார்க்கெட் உருவாக்க வேண்டும் என்பதே டோக்யோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் என்னுடைய கனவும் லட்சியமும் ஆகும்,” என்கிறார்.
இந்திய ஜப்பான் கலாசார தூதுவர் கயோலா புருகொவா கூறுகையில் “இந்திய திரைப்படத் துறையினருடன் குறிப்பாக தமிழ்த் திரைப்பட உலகினருடன் இணைந்து செயலாற்றுவது எங்களுக்கு மிகவும் பெருமை. தமிழ்ப் படங்களில் தென்படும் உற்சாகம் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. எங்கள் நாட்டின் பிரதான கலாசாரப் பெருமை என கருதப்படும் மறைந்த பிரபல இயக்குனர் அகிரா குரோசோவா அவர்களின் நினைவாக அவரது திரைப்படங்களின் கண்காட்சியை சென்னையில் நடத்த உள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.