ரஜினிகாந்திற்கு இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் உள்ள பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும், ரஜினிகாந்த், மீனா நடித்த ‘முத்து’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அங்கும் பல ரசிகர்கள் உருவானார்கள்.
அது மட்டுமல்ல அவருக்கென ரசிகர் மன்றங்களும் அங்கு உருவானது. தொடர்ந்து வெளியிடப்பட்ட ‘பாஷா’ படமும் அங்கு பெரிய வெற்றியைப் பெற்றது. ரஜினியின் பல படங்களைப் பார்த்த ஜப்பான் மக்களில் பலர் அவருடைய ரசிகர்கள் ஆனார்கள்.
தற்போது ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் சில ஆங்கிலத் தொலைக்காட்சி நிருபர்களும் சென்றுள்ளார்கள். சில தினங்களுக்கு முன் பிரதமரின் ஜப்பான் சுற்றுப் பயணத்தைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் அங்குள்ள ஜப்பான் நாட்டு இளைஞர் ஒருவரின் சிறு பேட்டியை ஒளிபரப்பினார்கள்.
அதில், அவர் கையில் பாரதீய ஜனதா கொடியை வைத்துக் கொண்டு இது பிஜேபி என்கிறார். அடுத்து அந்த ஃபோட்டோவைத் திருப்புகிறார். அதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஜினிகாந்த் இருக்கும் போட்டோ இருக்கிறது. “எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். மோடி சாரும், ரஜினி சாரும் நெருங்கிய நண்பர்கள். நான் ஜப்பான் ரஜினி ஃபேன் கிளப் உறுப்பினர். எனக்குத் தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். அவரைத் தலைவர்னு சொல்வாங்க. எனக்கு முத்து, பாஷா படங்கள் ரொம்ப பிடிக்கும். “பாஷா ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி ” என அந்த டயலாக்கையும் பேசிக் காட்டுகிறார்.
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ அதிகமாகப் பரவி வருகிறது. ரஜினிக்கு இங்கு மட்டும் தீவிரமான ரசிகர்கள் இல்லை, ஜப்பான் நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.
வீடியோவைக் காண…இங்கே க்ளிக் செய்யவும் இந்த வீடியோவில் 7வது நிமிடத்தில் அந்த ரசிகரின் பேட்டி இடம் பெற்றுள்ளது….