ஒரு பக்கம் நாடகக் கலை அழிந்து கொண்டு வருகிறது என்று சொன்னாலும், மறு பக்கம் ஒய்.ஜி.மகேந்திரா போன்றவர்கள் நாடகக் கலைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.
இரண்டாம் ரகசியம் நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரா அளிக்கும் அடுத்த நாடகமான ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் வரும் 14ம் தேதியன்று மேடையேற உள்ளது.
ஒய்.ஜி.மகேந்திராவின் அப்பாவான ஒய்.ஜி.பார்த்தசாரதியால் வெற்றிகரமான நாடகமாக உருவாக்கப்பட்ட ‘பரீட்டைசக்கு நேரமாச்சு’ பின்னர் சிவாஜி கணேசன், சுஜாதா, ஒய்.ஜி .மகேந்திரா நடிக்க அதே பெயரில் 1982ம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்து 90 நாட்கள் வரை ஓடியது.
சுமார் 32 வருடம் கழித்து அந்த திரைப்படத்தை மீண்டும் அதே பெயரில் நாடகமாக அரங்கேற்ற இருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. சிவாஜிகணேசன் நடித்த கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரா நடிக்க, சுஜாதா நடித்த கதாபாத்திரத்தில் சீனியர் டி.வி., நாடக நடிகையான டி.எஸ்.ஆனந்தி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யுஏஏ நாடகக் குழுவினர் நடிக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 14ம் தேதி மாலை 7 மணிக்கு, சென்னை, வாணி மகால் அரங்கில் நாடகம் அரங்கேற உள்ளது. தொடர்ந்து 18ம் தேதி வரை இரவு ஏழு மணிக்கு அதே அரங்கில் நடக்க உள்ளது.
ஶ்ரீராம் பிரப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த நாடகம் தொடர்ந்து சென்னையிலும், பல ஊர்களிலும் நடக்க உள்ளது என பத்திரிகையளார் சந்திப்பில் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.