மதுரையை மையம் கொண்டிருந்த தமிழ் சினிமா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது சென்னையில் மையம் கொண்டு விட்டது. அதிலும் வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் ‘ஆக்கம்’ படம் இருந்தாலும் அந்தப் படங்களுக்கும் எங்களது படத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என்கிறார் இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம். மு.களஞ்சியம் இயக்கிய சில படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவல் ‘ஆக்கம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
“சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதையை அமைத்திருக்கிறோம். ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதில்லை. அவன் எப்படிப்பட்ட சூழலில் வளர்கிறான், உருவாக்கப்படுகிறான் என்பதை வைத்தே அவன் வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
சதீஷ் ராவண் என்ற புதுமுகம் நாயகனாகாவும், வைதேகி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். ரஞ்சித், நடன இயக்குனர் தருண் குமார், பவர் ஸ்டார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சென்னைக்கே உரித்தான இசையை ஸ்ரீகாந்த் தேவா தந்திருக்கிறார். ‘கானா’ பாலா இல்லாமல் சென்னைப் படமா, அவரும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
வட சென்னையில் இதுவரை யாருமே படம் பிடித்திருக்காத பகுதிகளை இந்தப் படத்திற்காக படம் பிடித்திருக்கிறோம். குறிப்பாக வண்ணாரப்பேட்டை பகுதியில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் காதல் இருக்கிறது, ஆனால் அது நாயகியிடம் மட்டும்தான் இருக்கிறது. நாயகனைப் பொறுத்தவரையில் நாயகியைக் கூட ஒரு பொருளைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பார். சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம்.
ஆதிலஷ்மி பிலிம்ஸ் சார்பாக செல்வம், ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது, விரைவில் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.