ஹாலிவுட் படங்களைத் தழுவி தமிழில் எடுக்கப்படும் படங்கள் ஆண்டாண்டு காலமாய் நடைபெற்று வருகிறது. நம் மண்ணிற்கு சிறிதும் பொருத்தமில்லாத படங்களைப் பார்க்கும் போது, கண்டிப்பாக அது ஹாலிவுட்டிலிருந்து காப்பியடிக்கப்பட்ட படம் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் தற்போது வெளிவரும் படங்களின் கதை, காட்சிகள், பாடல்கள், சண்டைக் காட்சிகள் உட்பட எவையெவை எந்தப் படத்திலிருந்து ‘சுடப்பட்டவை’ என்பதை நமது இணையதள திரைப்பட ரசிகர்கள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். கற்பனை வறட்சியின் உச்சக்கட்டம்தான் இப்படிப்பட்ட ‘சுட்ட’ படங்கள். இப்படி செய்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஆனால், இன்னமும் நமது வாழ்விலிருந்தே பல உன்னதமான கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்களும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி மற்றும் பலர் நடிக்க சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘யான்’ திரைப்படம், 1978ம் ஆண்டு வெளிவந்த ‘மிட்நைட் எக்ஸ்பிரஸ்’ என்ற அமெரிக்கன் – பிரிட்டிஷ் படத்தின் அப்பட்டமான காப்பி என வலைதள வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் மூலம் நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இணையத்தில் தேடிய போது, ‘மிட்நைட் எக்ஸ்பிரஸ்’ படத்தின் விவரங்கள் கிடைத்தன. விக்கிபீடியா வலைத்தளத்தில் அந்தப் படத்தின் கதை தமிழிலேயே தரப்பட்டுள்ளது…அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்…
யு டியூப் வீடியோ இணையதளத்திலும் அந்தப் படம் முழுமையாக உள்ளது. அப்படியே படத்தைத் தமிழ்ப்படுத்தி பாடல்களைச் சேர்த்து இயக்குனர் ரவி கே.சந்திரன் கொடுத்துள்ளதாக அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.
‘யான்’ படத்தை சுமார் 30 கோடிக்கும் மேல் செலவு செய்து தயாரித்தார்களாம். படத்தின் சாட்டிலைட் உரிமை உட்பல மற்ற வியாபாரங்களுடன் சேர்த்து சுமார் 10 கோடி ரூபாய் வரை மட்டுமே வருமானம் வந்த நிலையில் 20 கோடி ரூபாய் அளவிற்கு ‘யான்’ படத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவேயில்லையாம், மும்பை, வெளிநாடுகள் என பறந்து பறந்து படமாக்கியிருக்கிறார்கள். படம் வெளியான பின் விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட படமாக ‘யான்’ அமைந்தது.
தரமான தமிழ்ப் படங்களைக் கொடுத்து வந்த தமிழ்த் திரையுலகம் சமீப காலமாக இப்படிப்பட்ட ‘காப்பி’ கலாச்சாரத்தில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறது.