ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன், நிறுவனமும் , லியோ விஷன் ஆகிய இரண்டு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’.
சிந்தனையைத் தூண்டும் , குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படமான இப்படத்தின் தலைப்பே படத்தின் கதையைச் சொல்லும்.
‘நல்ல பொருத்தமான தலைப்பே படத்தின் வெற்றியை 50 சதவீதம் தீர்மானிக்கும்’என்கிறார் லியோ விசன் ராஜ் குமார். அவரது முந்தைய படங்களும் இதைப் போலவே நீண்ட தலைப்பு உடைய படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ இதுவரை கேட்டிருக்காத, பார்த்திருக்காத ஒரு புதிய கதையாகும். புதிய இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா இந்த கதையைச் சொல்லும் போதே இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்து விட்டேன். ஒரு முன்மாதிரி கிராமமாகத் திகழும் ஒரு கிராமமும், அந்த கிராமத்தின் ஒழுக்கம் தங்களக்கு அசௌகரியத்தைத் தருகிறது எனக் கருதும் நாலு போலீசையும் பற்றிய கதை தான் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.
இதை நகைச்சுவை மூலம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம். அருள் நிதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சிங்கம் புலி மற்றும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பகவதி பெருமாள் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்கள்.
என்னுடைய பட நிறுவனமான ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் சார்பாக மேலும் பல திறமைகளை அறிமுகம் செய்ய உள்ளோம்,” என்கிறார் ஜே.சதீஷ் குமார்.