தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தித் திரையுலகிலும் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
தமிழில் சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் ஃபேன்டஸி மற்றும் சரித்திரப் படத்தில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளார் ஸ்ரீதேவி. படத்தில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு தமிழ்ப் படத்திற்காக சென்னையில் இருக்கிறேன். ஒரு குழந்தை நட்சத்திரமாக முதல் நாள் நான் நடித்த பல நினைவுகள் திரும்ப வருகின்றன.
எனக்கு எப்போதும் ஆதரவும் வரவேற்பும் கொடுக்கும் சென்னைக்கு எனது நன்றிகள். திரும்பவும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இன்றைய தலைமுறை நடிகர்களுடனும், தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் அவர்களுடைய தொழில்முறையும் எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
15 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ 2012ம் ஆண்டு வெளி வந்து வெற்றி பெற்றது. அதன் பின் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வந்திருப்பது ஹிந்தித் திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.