தமிழ் சினிமா சம்பந்தமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் பலரும் பலமுறை பேசக் கேட்டிருக்கிறோம். சிலர் பேச ஆரம்பித்தால் இன்னும் கூட கொஞ்ச நேரம் கேட்கலாமே எனத் தோன்றும். சிலர் பேச ஆரம்பித்தால் சீக்கிரமா பேசி முடிச்சி உட்கார்ந்தால் பரவாயில்லை எனத் தோன்றும். சிலரைப் பேச அழைக்கும் போதே…ஐயய்யோ…என அலறத் தோன்றும்.
அவர்களில் இயக்குனர் மிஷ்கின் மூன்றாவது ரகம். நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்படங்களை விமர்சிப்பவர்களைப் பற்றியும், நடிகர் கமல்ஹாசன், எடிட்டிர் பி.லெனின் ஆகியோரையும் விமர்சனம் செய்தும் வாய்க்கு வந்தபடியும் பேசியிருக்கிறார். இடையிடையே கை தட்டுங்கள் என்று கைத்தட்டல்களையும் கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார். நாம் பார்த்த வீடியோவிலிருந்து….
“சம்பந்தமே இல்லாமல் ‘நாயகன்’ படம் ‘காப்பி’ அடிக்கப்படவில்லையா…கமலுக்கும் மணிரத்னத்திற்கும் விருதுகள் கொடுக்கலையா, கமல் இருக்கிற மேடையில அவர் மட்டும்தான் பேசணும், மற்றவர்கள் பேச முடியாது,” என எதையோ மனதில் வைத்துக் கொண்டும் பேசியுள்ளார்.
அதோடு, மேடையில் இருந்த இந்தியத் திரையுலகத்தின் சிறந்த படத்தொகுப்பாளரான பி.லெனினையும் கிண்டல் தொனியுடன் பேசினார். “நான் ‘முகமூடி’ படம் எடுத்த போது எனக்கு ஒரு எஸ்எம்ஸ் வந்துச்சி. அதை நான் இந்த மேடையில சொல்லணும். ”Please rewrite your scenes, dont just tell”, அப்படின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்துச்சி.
அப்புறம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் எடுத்தப்போ எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சி. “Yes, you have rewritten the script properly’’ அப்படின்னு ஒரு எஸ்எம்ஸ் வந்துச்சி. ஆனால், அவர் ‘குட் விஷஸ்’ சொல்லலை. அப்படி ஒரு எஸ்எம்எஸ் அவர் அனுப்புவாருன்னு நான் எதிர்பார்த்தேன்.
நான் தோத்துப் போயி கேவலமான படம் எடுக்கும் போது அதை சொல்ல முடியுது, நல்ல படம் எடுக்கும் போது அதை அனுப்ப முடியலை. இப்படித்தான் எல்லா இடத்துலயும் விமர்சகர்கள் இருந்திருக்கிறார்கள்.
நான் தமிழ் சினிமாவில் பார்த்த ஒரு பிதாமகர் எனக்கு அனுப்புனாரு. Whenever you said that in stage….அது கமல்ஹாசன் உட்கார்ந்திருந்த ஸ்டேஜ்ல நான் சொல்லிட்டேன். அதனால அது தப்பு ஆக்சுவலா, ஏன்னா கமல்ஹாசன் இருக்கிற ஸ்டேஜ்ல அவரு மட்டும்தான் பேசணும், வேற யாரும் பேசக் கூடாது…என்ன லெனின் பார்க்கிறாரோ, அதை நான் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். குரேசேவா பத்தி , ‘செவன் சாமுராய்’ பத்தி என்னாலயும் 24 மணி நேரம் பேச முடியும்,” என தெரிவித்தார்.
மிஷ்கினின் இந்தப் பேச்சு நம்மை அதிர்ச்சியில்தான் ஆழ்த்தியது.
இன்று இணையதள உலகில் அறிவியல் புரட்சியால் பல மாற்றங்கள் ஏன் புரட்சியே நிகழ்ந்து விட்டது என்று கூட சொல்லலாம். ஒரு மொபைல் போனிலேயே வீடியோவை ஷுட் செய்து விமர்சனமாக யு டியூபில் வெளியிடுகிறார்கள். நீங்கள் வளரும் அளவிற்கு ரசிகர்களும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறான்.
அவனுடைய தாகத்திற்கு ஏற்ற மாதிரியான படத்தைப் பார்க்கும் போது அவன் திருப்திப்பட்டுக் கொள்கிறான். நீங்களும் பதிலுக்கு விமர்சனம் செய்வதை விட்டு விட்டு, உங்களை நீங்களே விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.
உங்களின் “சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ‘காப்பி’ என்று தெரிந்தும் ‘நந்தலாலா ” ஆகிய படங்கள் இன்றும் பேசப்படுவதன் காரணம் விமர்சகர்கள்தான். அதே சமயம், “முகமூடி’ போன்ற படங்களுக்குக் கிடைக்கும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
விமர்சனத்தை யார் வைக்கிறார்கள் என்று பார்க்காதீர்கள்…என்ன சொல்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள்…