ஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’

‘மிருகம்’ படத்தில் அறிமுகமாகி ‘ஈரம், மரகத நாணயம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த ஆதி, தற்போது தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

தெலுங்குத் திரையுலக இளம் ரசிகர்களைக் கவர்ந்த ‘ஆர்எக்ஸ் 100’ படம் பல சாதனைகளைப் படைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் பெற்றுள்ளார்.

இவர் தற்போது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, அதர்வா, ஹன்சிகா நடிக்கும் ‘100’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.

‘ஆர்எக்ஸ் 100’ படம் பற்றி மகேஷ் கோவிந்தராஜ் கூறியதாவது,

“விநியோகத் துறையில் ஒரு நம்பகத் தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்படத் தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ‘ராஜ தந்திரம்’ வீரா நடிக்கும் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, அதர்வா – ஹன்சிகா நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கும் ‘100’ ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் நிலையில் உள்ளது.

ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாகப் பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை. தெலுங்கில் ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டிருந்தது.

ஆதி என்னை அழைத்து படம் பார்க்கஙச சொன்னார். எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியால் படத்தின் உரிமையைப் பெற்றேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதையம்சம் கொண்ட படம் இது.

ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்த ஒருவர்தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வும் நடைபெற உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மிக விரைவில் உருவாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வரும் ‘ஆர்எக்ஸ் 100’’, என்கிறார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

Read Previous

‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்

Read Next

விரைவில் திரைக்கு வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

Most Popular