எஸ்.பி. சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’.
டெல்லியைச் சேர்ந்த அதிதி செங்கப்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, ‘ர’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது,
“இப் படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித அனுபவம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் நான் முதன் முறையாக நடிக்கிறேன். எனது கதாப்பாத்திரத்தின் பெயர் அஞ்சலி, ஒரு தைரியமான , தெளிவான பெண். இவரை ஹீரோ அர்ஜுன் எப்படி குழப்புகிறான் என்று வெகு அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர் மதுமிதா.
இரு மொழிப் படம் என்பதால் நடிப்பதற்கு பெரும் சவாலாய் அமைந்தது, எனக்கு நிறைய கற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. பெரும்பாலான காட்சிகளில் தமிழ் வசனத்திற்கு பதிலாக தெலுங்கு வசனங்கள் பேசி சொதப்பினேன். இதுவாவது பரவாயில்லை, தமிழில் ஒரு கதாநாயகன், தெலுங்கில் இன்னொருவர். ஒரு சில நிமிடங்களில் இருவருடன் ஒரே முக பாவத்துடன் காதல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது.
என் தோழிகள் கூட இதை வைத்து என்னை ரொம்ப ஓட்டுவார்கள். காதல் காட்சிகளில் ஒருவருடனும் சண்டை போடும் காட்சிகளில் இன்னொருவரிடமும் ஈடுபாடுடன் நடித்தேன். நடிப்பு தான், தப்பா நினைச்சுக்காதீங்க,” என்கிறார்.
உங்களுக்கு தமிழில் தெரிந்த ‘மூணே மூணு வார்த்தை’ எது என்று கேட்ட போது, “எனக்கு தமிழ் பேச வராது இருப்பினும், ‘எனக்கு ரொம்ப பசிக்குது’ என்ற மூணு வார்த்தையை நான் மிகவும் அதிகமாக பயன்படுத்துவதுண்டு. மிக நேர்த்தியான படங்களை தயாரித்து வரும் கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பணிபுரிந்தது மிகவும் பெருமையாகவுள்ளது. இயக்குனர் மதுமிதா, மற்றும் தயாரிப்பாளர் எஸ்பி. சரண் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்கிறார் அதிதி செங்கப்பா.