தமிழ் சினிமாவில் வெளிவரும் முக்கால்வாசிப் படங்கள் மசாலாப் படங்கள்தான். அதனால்தானோ என்னவோ தன்னுடைய படத்திற்கு ‘மசாலா படம்’ எனப் பெயர் வைத்துவிட்டார் இயக்குனர் லட்சுமண் குமார்.
பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, லட்சுமி தேவி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தக் காலத்தில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட பின் அதற்குப் பிறகு ஃபேஸ்புக், டிவிட்டர் என பல சமூக வலைத்தளங்களில் விமர்சனம் என்ற பெயரில் படங்களை தாறுமாறாக விமர்சிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது.
அப்படி விமர்சிப்பவர்களைப் பற்றிய ஒரு படமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறாராம் இயக்குனர் லட்சுமண் குமார்.
“ஒரு காதல், அந்தக் காதலுக்கு வில்லன் அப்படிங்கற வழக்கமான சமாச்சாரம் எல்லாம் படத்தில் இல்லை. கோடி ரூபாய்க்கு மேல பணம் போட்டு ஒரு படத்தை எடுக்கறாங்க. ஆனால், படத்தைப் பார்க்கிறவங்க படம் மொக்கை, குப்பை அப்படின்னு 100 பேருக்கு மெசேஜ் அனுப்பிட்டுப் போயிடறாங்க. படத்தை எடுத்த தயாரிப்பாளர் தெருக்கோடிக்குப் போயிடறாரு.
தமிழ்ல வர்ற 100 படங்கள்ல 95 படங்கள் மசாலாப் படங்கள்தான். ஒரு ஓபனிங் பாட்டு, நாலு சண்டை, நாலு பாட்டு, ஒரு பரபர கிளைமாக்ஸ், இதுதான் தமிழ் சினிமாவோட வழக்மான பார்முலா.
மசாலாப் படங்களை சமூக வலைத்தளங்கள்ல கலாய்க்கிற ‘நெட்டிசன்கள்’ ஒரு சவாலுக்காக மசாலா படம் எடுக்க கிளம்பறாங்க. படம் எடுக்கிறதுக்கு முன்னாடி மசாலாப் படம் பற்றி ஆராய்ச்சி பண்றாங்க. அப்புறம் கதை எழுதறாங்க, அவங்களால ஒரு மசாலா படத்தை எடுக்க முடியுமாங்கறதுதான் படத்தோட கதை.
தாமஸ் ஆல்வா எடிசன் முதல் சினிமாவை காட்டியதிலிருந்து பவர் ஸ்டார் நடிக்கிற வரைக்கும் சினிமாவை பற்றி ஒரு மினி சினிமாவை டைட்டிலுக்கு முன்னாடியே ஓட்டுறோம். பாரதிதாசன் சினிமாவை திட்டி எழுதின ஒரு பாட்டை ராப் மியூசிக்கா போட்டிருக்கோம், கூத்துப்பட்றை ஆளுங்க, ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்டுங்க 40 பேர் நடிச்சிருக்காங்க.
மிர்ச்சி சிவா, சிம்ஹாவை ஹீரோன்னு சொல்லிக்கலாம். லட்சுமி தேவியை ஹீரோயின்னு சொல்லிக்கலாம். ஆனால் நிஜத்துல அப்படி எதுவும் கிடையாது. ரொம்ப குழப்பமா இருக்குதுல்ல, அதுதான் மசாலா படம்,” என்கிறார் இயக்குனர் லக்ஷ்மன் குமார்.