ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் யு டிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
விஜய் சேதுபதி முதன் முறையாக ஆர்யா, ஷாம் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறியதாவது,
“இப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் இன்னமும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாபாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் பார்த்திருக்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாபாத்திரங்களில் ஒன்றாக எமலிங்கம் நிலைக்கும்.
இந்தக் கதாபாத்திரத்திற்காக பிரத்தியேகப் பயிற்சி என்று ஏதும் எடுக்கவில்லை. உண்மையை சொல்லப் போனால் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தையும் முழுமையாக உணர்ந்தாலே நடித்து விட முடியும். போதுமானது. எமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தின்புதுமைக்காக சற்றே உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இக்கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் இயக்குனர் நன்கு விளக்கினார்.
‘ புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான, சமூகக் கருத்தூன்றிய கதையம்சம் கொண்டது. நான், ஆர்யா, ஷாம், கார்த்திகா என அனைவரும் கலந்து கொண்ட படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் இனிமையாகக் கழிந்தது. படத்தில் யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியாது. ஜனநாதன் சாரின் கதை எங்களுக்கென்று ஒரு இடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் நன்றாக நடிக்கவும் இடம் இருந்தது,” என்கிறார் விஜய் சேதுபதி.