ஈராஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய தமிழ்ப் படங்கள்

இந்திய திரைப்பட நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ஈராஸ் இன்டர்நேஷனல், ஆர்.வி.பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து “பிறை தேடிய நாட்கள், எங்கிட்ட மோதாதே” என்ற இரண்டு படங்களை ஆரம்பித்துள்ளது. இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘விடியும் முன்’ படத்தை எழுதி அந்தப் படத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றிய ஆபிரகாம் பிரபு ‘பிறை தேடும் நாட்கள்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

‘எங்கிட்ட மோதாதே’ படத்தை அறிமுக இயக்குனர் ராமு செல்லப்பா இயக்குகிறார். “கேடி பில்லா கில்லாடி ரங்கா, மயக்கம் என்ன, பசங்க” ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றி ஒன்பது ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் ராமு செல்லப்பா. இந்தப் படத்தில் நட்ராஜ் சுப்பிரமணியம், சஞ்சிதா ஷெட்டி, ராஜாஜி, விஜய் முருகன், ராதாரவி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னை, அனகாபுத்தூர், வெல்கோ திரையரங்கில் ஆரம்பமானது.

“பெரிய படங்களை வெளியிடுவதைத் தாண்டி புதிய கருத்துக்களையும், கதைகளையும் கொண்ட தயாரிப்புகளைக் கொடுத்து நம்பிக்கையான திறமைசாலிகளை அடையாளப்படுத்த நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இம்மாதிரியான படங்களை ஆதரிப்பதன் மூலம் நல்ல திறமைசாலிகளை ஊக்குவித்து நல்ல திரைப்படங்களை அளிக்க வேண்டும் என்ற எங்களது நோக்கமும் நிறைவேறும் என ஈராஸ் இன்டர்நேஷனல் வியாபார முன்னேற்ற துணைத் தலைவரான சாகர் சத்வானி தெரிவிக்கிறார்.

Read Previous

சிங்கப்பூரில் ‘சிங்கிள்’ ஆக வரும் ‘ரஜினி முருகன்’…

Read Next

பாதிக்கப்பட்டவர்களுக்குப் படம் – ரஜினிக்கு ‘லிங்கா’ வினியோகஸ்தர்கள் கோரிக்கை