‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வடசென்னை’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி, பவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில்,

‘‘வடசென்னை’ படத்தின் கதை 2003ல் உருவான ஒரு கதை. ‘பொல்லாதவன்’ படத்திற்குப் பிறகு ‘வடசென்னை’ படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ‘ஆடுகளம்’ படத்தை எடுத்தோம்.

அடுத்த படத்திலும், நாங்கள் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம். சில நாட்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தை சிம்பு வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாக வெற்றிமாறன் கூறினார். படத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். படத்தில் அது அரை மணி நேரம் மட்டுமே வரும். அந்த அளவிற்கு எனக்கு பெருந்தன்மை இல்லை என அதில் நடிக்க மாட்டேன் என்றார். பின்னர் சில காரணங்களால் அந்தப் படத்தில் சிம்புவும் நடிக்க முடியாமல் போனது. திரும்பவும் அந்தப் படம் என்னைத் தேடியே வந்தது.

சுற்றிச் சுற்றி கடைசியாக என்னிடமே வந்துவிட்டது. அது போலத்தான், ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் முதலில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். பின்னர் வேறு சிலர் நடிக்க வேண்டி வந்தது. ஆனாலும், கடைசியில் அந்தக் கதாபாத்திரம் அவரைத் தேடியே போனது,” என்றார்.

இந்தப் படத்தில் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான காட்சிகள் கலக்கலாக இருக்கும் என்கிறார்கள். அடுத்த வார வெளியீட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘வட சென்னை’.

Read Previous

ஆண் தேவதை – டிரைலர்

Read Next

ஆண் தேவதை – விமர்சனம்