ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகி சேது, சம்பத், மதுஷாலினி மற்றும் பலர் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
ஒரு தரமான கமர்ஷியல் படத்திற்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுப் பேசினார்.
“நான் இதுவரை இரு மொழிகளில் உருவான 24 படங்களில் நடித்திருக்கிறேன். அப்படி நடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இந்தப் படத்தில் அதை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொண்டேன்.
எல்லார் கிட்டயுமே ஐடியா இருக்கு. ஏன், ரசிகர்கள் கூட படத்தை இப்படி எடுத்திருக்கலாமேன்னு ஐடியா கொடுப்பாங்க. 70, 80 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கிற படத்தைப் பத்தி 70, 80 ரூபாய் கொடுத்து படத்தைப் பார்த்துட்டு ஐடியா சொல்வாங்க.
ஆனால், எங்க தப்பு நடக்குதுன்னா, அதை நிர்வாகிக்கறதுலதான் அதிகம் நடக்குது. திட்டமிடல் சரியா இருந்தால் எல்லாம் சரியா நடக்கும். இந்தப் படத்தோட இயக்குனர் ராஜேஷ் சரியான திட்டமிடல் மூலமாதான் வளர்க்கப்பட்டிருக்காரு.
நாங்க, இங்க எந்த குழப்பமும் இல்லாமல் நிக்கிறோம், மிகவும் நம்பிக்கையோட இருக்கோம். பல விஷயங்களை இந்தப் படத்துக்காகச் செய்திருக்கோம். எதிர்காலத்தில் இன்னும் அதிகமான திட்டமிடலை ஒழுங்குடன் செய்வோம். அந்த திட்டமிடலை மேற்பார்வையிடவும், புரிந்து கொள்ளவும் மட்டுமல்லாமல் அதை தயாரிப்பு நிறுவனமும் பின்பற்ற வேண்டும்.
ராஜ்கமலின் வேகம் சற்றே அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை இந்தக் குழு எனக்குக் கொடுத்திருக்கிறது. அடுத்த படத்திற்கான லொக்கேஷன்கள், எதை எல்லாம் முடிவு செய்யப்பட்டு அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வேலை மும்முரத்தில் இந்த சந்தோஷம் உங்களுடன் கொஞ்ச நேரம்,” என கமல்ஹாசன் பேசினார்.
நிகழ்ச்சியில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, சந்தான பாரதி, மதுஷாலினி, ஜெகன், உமா ரியாஸ், இசையமைப்பளார் ஜிப்ரான், வசனகர்த்தா சுகா, ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ், படத் தொகுப்பாளர் ஷான் முகம்மது, சண்டைப் பயிற்சியாளர் ரமேஷ், நடன இயக்குனர் ஷோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.