தமிழ்த் திரையுலகத்தில் பலரும் ‘மீ டூ’ விவகாரத்தில் சின்மயி, வைரமுத்து, சுசிகணேசன், லீனா மணிமேகலை என பிஸியாக இருப்பதால், அந்த விவகாரத்தை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை மறந்துவிட்டனர்.
ஸ்ரீரெட்டி தனி ஆளாக இருந்து போராட்டம் நடத்தியும் அவருக்கு யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால், சின்மயி, யாரோ சொன்ன விஷயங்களை அவருடைய டிவிட்டரில் பதிவிட்டு, அவருக்கு நேர்ந்த பாலியல் துன்பம் என்று சொன்னதும் மீடியா உட்பட பலரும் அவருக்கு ஆதரவாக வரிந்துகட்டி வருகிறார்கள்.
ஸ்ரீரெட்டி அப்போது கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களில் ராகவா லாரன்ஸும் இடம் பெற்றிருந்தார். அப்போதே அதற்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்தார். ஸ்ரீரெட்டி அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினால் அவருக்கு தக்க வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் சென்னையில் வந்து குடிபுகுந்த ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்சை சந்தித்துப் பேசியுள்ளார். அது பற்றி அவருடைய பேஸ்புக்கில் நேற்று பதிவிட்டுள்ளதாவது,
“எனது நண்பல்களுக்கு ஒரு நல்ல செய்தி. நான் லாரன்சு காருவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் என்னை இனிமையாக வரவேற்றார். அவரது வீட்டில் பல குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் அவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
நான் ஆடிஷனும் அளித்தேன். அவருடைய அடுத்த படத்தில் என்னைத் தேர்வு செய்துள்ளார். எனக்கு நல்ல கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கான முன்பணத்தையும் பெற்றுக் கொண்டேன். அந்தப் பணத்தை புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாகுளம் மக்களுக்காகப் பகிர்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.
சின்மயி விவகாரத்தில் ஸ்ரீரெட்டியின் இந்தப் பதிவை பலரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் போலிருக்கிறது.