‘மீ டூ’ விவகாரம் வைரமுத்து, சின்மயி இருவருக்கும் இடையில்தான் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ஏஆர் ரகுமான், வைரமுத்து, சின்மயி கூட்டணி காலத்தால் மறக்க முடியாத பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது.
இந்த ‘மீ டூ’ விவகாரம் பற்றி ஏஆர் ரகுமான் என்ன நினைக்கிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.
அவரது சகோதரி இசையமைப்பாளர், பாடகி ஏஆர் ரைஹானா இன்று நியூஸ் 7 டிவிக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் வைரமுத்து, சின்மயி பற்றி வெளிப்படையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஏஆர் ரகுமான் என்ன சொன்னார் என்று கேட்ட கேள்விக்கு, “என்ன இது சின்மயி, வைரமுத்து பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். யாராவது தற்கொலை செய்து கொண்டால் என்ன ஆவது என ‘இன்னசன்ட்’ ஆகக் கேட்டார் ரகுமான். அவருக்கு ‘காசிப்’ பேசுவதே பிடிக்காது. யாரைப் பற்றி ஏதாவது சொன்னால், போய் வேலையைப் பாருங்கள் என்று சொல்வார். இந்த ‘மீ டூ’ விவகாரம் அவருக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது,” என்றார்.
மேலும், சின்மயிக்கு ரகுமான் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்விக்கு, “பொதுவாக சர்ச்சையான ஆட்களுக்கு ரகுமான் வாய்ப்பு கொடுப்பது வழக்கமில்லை,” என்றார்.
மேலும் சில கேள்விகளுக்கு, வைரமுத்து சார் பற்றி சிலர் தவறாகப் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். சின்மயி மற்றும் அவருடைய அம்மா இருவருமே என்னிடமே தகராறு செய்திருக்கிறார்கள். அவர்கள் எதற்கும் பயப்படுபவர்கள் அல்ல. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் எனக்கு எந்த பிரச்சினையும் நடைபெற்றது கிடையாது. பெரும்பாலும் இலங்கைத் தமிழர்கள் தான் இப்படி கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல,” என்றும் ரைஹானா தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரியவர்களுக்கு ரகுமான் வாய்ப்பு தர மாட்டார் என ரைஹானா சொல்வதை வைத்துப் பார்த்தால் இனி, ரகுமான் இசையில் வைரமுத்துவுக்கும், சின்மயிக்கும் வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகிறது.