ரகுவரன், ரகுவண்ணன், மோனிகா, மேகா நாயர் மற்றும் பலர் நடித்த ‘தொடக்கம்’ படத்தை இயக்கிய முத்துக்குமார் இயக்கத்தில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’.
படத்தின் தலைப்பே இது எந்த விதமான விஷயத்தை அரங்கேற்றப் போகிறது என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியும்.
பணத்துக்காக சிறுமிகளாக இருக்கும் போதே ஹார்மோன் ஊசிகளைப் போட்டு அவர்களை பெரிய பெண்களாக மாற்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபடவைக்கும் அதிர்ச்சிகரமான விஷயத்தைத்தான் இந்தப் படத்தில் கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.
முதல் படத்தின் பெயர் ‘தொடக்கம்’, இரண்டாவது படத்தின் பெயர் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’ என படங்களின் தலைப்பிலேயே கதைக் கருவைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.
இப்படி ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை எப்படி படமாக எடுக்க முன் வந்தீர்கள் என்றதற்கு அவர் அளித்த பதில்…
“விபச்சாரத் தொழிலே இருக்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் அந்தத் தொழிலை அங்கீகரித்தது தவறு என்று சொல்லியிருக்கிறோம்.
காலையில் இந்தத் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் மறுநாள் விடியும் வரை கூட இடைவெளி இல்லாமல் ஒரு மிஷின் போல பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்தத் தொழிலில் இருக்கும் ஒரு பெண், தனது மகள் தவறிக் கூட இந்தத் தொழிலுக்கு வந்து விடக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால், அதையும் மீறி அவரது வந்து மகள் வந்துவிட அதற்கடுத்து நடக்கும் போராட்டங்கள்தான் கதை,” என்கிறார் இயக்குனர் முத்துக்குமார்.
சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் துணிச்சலான ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமார், தனக்குகு திரை ரசிகர்களும் ஆதரவு தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.