‘என்று தணியும்’ – பல உண்மைகளின் கதை – பாரதி கிருஷ்ணகுமார்

வேல் புரொடக்சன்ஸ் கே.பழனிசாமி தயாரிப்பில் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இரா.பிரபாகர் இசையமைப்பில் யுவன் மயில்சாமி, ராஜேஷ் பாலசந்திரன், சாந்தனா மற்றும் பலர் நடிக்கும் ‘என்று தணியும்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, பி.வாசு, ஜெயம் ரவி, சந்தானம், கருணாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில்,

“மனிதன்தான் எல்லைக் கோடுகளை வரைகிறான். விண்ணிலே இருந்து பார்க்கிற போது, விமானத்திலே இருந்து பார்க்கிற போது, தேச எல்லைகள், மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள், என்று மனிதன் வரைந்த ஒரு எல்லையையும் கண்ணில்படுவதில்லை.

ஆனால், மனிதன் எல்லைகளை வரைந்து கொண்டேயிருக்கிறான். சாதி எல்லைகளை, மத எல்லைகளை, மொழி எல்லைகளை, இன எல்லைகளை என்று இழிவான கோடுகளை மனிதன் வரைந்து கொண்டேயிருக்கிறான்.

எத்தனை பிரிவான எல்லைகளை மனிதன் வரைந்த போதிலும் அத்தனையையும் தாண்டி பூக்கும் வல்லமை படைத்தது காதல், காதல் ஒன்றுதான்.

காதல் ஒருவனை ஒளிரச் செய்கிறது, ஒளி விடச் செய்கிறது. காதல் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. இந்த உலகம் ஏன் இன்னும் அழியவில்லை என்றால் அன்றாடம் குழந்தைகளும், காதலர்களும் பிறந்து கொண்டேயிருக்கிறார்கள்.

நாடகத்தில், காப்பியத்தில், காவியத்தில் காதல் என்றால் பாராட்டுகிற உலகம் வீட்டில் காதல் என்றால் அனைத்து ஆயுதங்களையும் கொண்டு தாக்க முயற்சிக்கிறது.

மலரினும் மெல்லிய காதலுக்கு எதிராக அவ்வளவு தீமைகள், உடம்பில் ஓட வேண்டிய ரத்தம், வீதியில் ஓடவே கூடாது. ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் இல்லை.

அதிகாரத்தால் ஏற்படும் வன்முறைக்கும், அதிகாரத்தால் பாதிக்கப்படுபவனின் வன்முறைக்கும் வித்தியாசம் உள்ளது.

பகைமை, மோதல்கள், பாகுபாடுகள் ‘என்று தணியும்’ என்று சமூகத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இது உண்மைக் கதை அல்ல, பல உண்மைகளின் கதை,” என்றால் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்.

Read Previous

Aarathu Sinam – Review

Read Next

ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த கேத்தரின் தெரேசா