ஜெய், சுரபி மற்றும் பலர் நடித்துள்ள ‘புகழ்’ படம் நாளை வெளியாகிறது. படத்தில் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார்.
‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் தனக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பாலாஜி.
“வடகறி’ படத்தின் மூலம் எனக்கும் ஜெய்க்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. அந்தப் படத்தில் எங்களுக்குள் இருந்த கூட்டணி, இந்தப் படத்திலும் வெற்றிக் கூட்டணியாகத் தொடரும் என்பது நிச்சயம்.
‘புகழ்’ தற்போதைய பரபரப்பான அரசியல் பின்னணி கொண்ட கதை. ஆயினும் சில காட்சிகள் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு நடிகனாக இந்தப் படம் எனக்கும் நிச்சயம் புகழ் கொடுக்கும். ஜெய் இந்தப் படத்தின் மூலம் மிக பெரிய புகழை அடைவார் என்பது நிச்சயம். இந்தப் படத்துக்காக நாங்கள் ஆவடி அருகே சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.
எங்களுக்கும் அங்கு தினமும் கூடும் ரசிகர்களுக்கும் நெருங்கிய அன்பு உண்டானது. நாங்கள் படப்பிடிப்புக்கு கொஞ்சம் லேட்டாகச் சென்றால் கூட அங்கு இருப்போர், என்ன சார் , இன்னிக்கு லேட்டுன்னு கேப்பாங்க.
தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்தைக் கண்டு பயந்தோமோ இல்லையோ, ரசிகர்களின் கேள்விக்குப் பயந்து நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விடுவோம்.
இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்துக்குப் பிறகு நிச்சயம் ஒரு நட்சத்திர இயக்குனராக வலம் வருவார் என்பது உறுதி,” என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.