அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுத ‘ஜித்தன்’ ரமேஷ், மயில்சாமி, ரோபோ ஷங்கர், கருணாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘ஜித்தன் 2’.
இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா படம் பற்றி கூறுகையில்,
“என் வாழ்க்கையில் எனக்கு ஓர் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் ‘ஜித்தன்’. அன்று முதல் இன்று வரை ‘அ முதல் ஃ தானடா’, பாடல் ஒலிக்காத கச்சேரியே கிடையாது. அதே போல 10 மடங்கு அதிகமாக நச்சென்று ஒரு குத்து பாடலை இந்த படத்திற்காக இசையமைத்துள்ளேன். மேலும் வெளிநாட்டில் இருந்து பின்னணி இசைக்காக வரவழைக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்ஸ் படத்திற்கு கூடுதல் பலத்தை தரும்,” என்கிறார்.
‘படத்தின் கதைப்படி முதல் பாகத்தில் இறந்து போன ரமேஷ் இந்த பாகத்தில் மீண்டும் பிறந்து, பேயுடன் மாட்டிக்கொண்டு வாழும் தருணங்களே ‘ஜித்தன் 2’வின் கதைக் கரு. இந்தத் திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் மனதை வென்று, அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கும்”, என்கிறார் படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ள முதல் பாகத்தின் இயக்குனரான வின்சென்ட் செல்வா.
படத்தின் அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா கூறுகையில், “பொதுவாக பேய் என்றால் பயம் மட்டும் தான் என்று நினைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு வேறு சில விஷயங்களும் உள்ளது என்ற கருத்தை புதியகோணத்தில் இந்தப் படம் மூலம் கூறி இருக்கிறோம்,” என்கிறார்.
இத் திரைப்படம், ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகிறது.