ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒற்றுமையான, தங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லாத நடிகர்களை இந்தக் காலத்தில் நிச்சயம் பார்க்க முடியாது.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே காலகட்டத்தில் திரையுலகத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டு தனித் தனியாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’ படம் உருவாகி வந்த நேரம். இயக்குனர் மகேந்திரனுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த மோதலால், அந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘செந்தாழம் பூவில்…’ பாடலையும் அதற்கு முன் வரும் ஒரு காட்சியையும் எடுக்க முடியவில்லையாம்.
அந்தப் பாடலையும், அந்தக் காட்சியையும் தன்னுடைய சொந்த செலவிலேயே படமாக்க கமல்ஹாசன் முன் வந்திருக்கிறார். அதன் பின் அதைப் படமாக்கி படத்தில் சேர்த்திருக்கிறார் மகேந்திரன்.
ரஜினிகாந்த் படத்திற்கு கமல்ஹாசன் உதவி செய்த அந்த ‘முள்ளும் மலரும்’ பட அனுபவத்தை இன்று நடைபெற்ற ‘வாகா’ திரைப்பட இசை வெளியீட்டில் இயக்குனர் மகேந்திரன் நன்றி கூர்ந்தார்.
“கமல்ஹாசன் இல்லை என்றால் நான் இல்லை” என்று உணர்வு பூர்வமாக பேசினார்.
அன்று தொடர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசனின் நட்பு, இன்றும் எந்த ஈகோவும் இல்லாமல் தொடர்ந்து வருவது இன்றைய வளரும் நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.