நேர்மையான இருவரின் வாழ்க்கை ‘கண்ணே கலைமானே’

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’.

சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார்.

இப்படத்தை வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

படம் பற்றி நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

“இந்தப் படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியைத்தான் சேரும். நாம் கிராமப்புறத்து மக்களைப் பற்றிய எத்தனையோ விதமான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் சீனு ராமசாமி சார் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாகக் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மை கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அது அளிக்கிறது.

ஆரம்பத்தில், சீனு ராமசாமி சார் எனக்கு வேறு ஒரு கதையை சொன்னார். அதில் என் கதாபாத்திரம் மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பைக் கோரியது. அந்தத் தோற்றத்தை கொண்டு வர சுமாராக 4-5 மாதங்கள் ஆகும் என இருவருமே உணர்ந்தோம். என்னை விடவும் அதிகமாக, சீனு சார் எப்போதும் மிகவும் எளிதில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கலைஞர். மற்ற சில காரணங்களாலும் படத்தை சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்போது தான் அவர் எனக்கு ‘கண்ணே கலைமானே’ கதையைச் சொன்னார். இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது.

தமன்னா ஒரே டேக்கில் நடிக்கக் கூடிய நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளே இருந்தது. தமன்னா அதை மிக எளிதாகச் செய்தார். ஒருவேளை, அவர் ஏற்கனவே சீனு ராமசாமி படத்தில் நடித்ததனால் அவருக்கு எளிதாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பல காட்சிகளிலும் அவர் சிங்கிள் டேக்கில் நடித்ததைப் பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன்.

இந்தப் படத்தின் நாயகன் ஒரு இயற்கை வேளாண்மையை நம்புகிற விவசாயி. அதைத் தாண்டி வெளியில் வரும் செய்திகள் போல இது விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல. நல்ல மனதுடைய நேர்மையான வாழ்க்கை வாழும் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பது பற்றிய படம். எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால் கண்ணே கலைமானே மனித உறவுகளை பற்றிய படம்,” என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Read Previous

ரஜினிகாந்த் தலைவர் என்றால்…மற்றவர்கள்.., – சீமான் கேள்வி

Read Next

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று