தமிழ் சினிமாவில் நன்றி மறப்பவர்களும், பழையவற்றை மறப்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாபி சிம்ஹா.
குறும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நண்பர்களின் தயவால் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது வாங்கும் அளவிற்கு உயர்ந்தார். ஆனாலும், தன்னை இந்த அளவிற்கு ஏற்றி விட்டவர்களை அவர் மறந்துவிட்டார் என்றே அவருடைய சில நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் நடித்துவிட்டு, பின்னர் அந்தப் படம் வெளிவராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து பார்த்தார் பாபி சிம்ஹா. ஆனால், அவரின் முயற்சி பலிக்கவில்லை. இத்தனைக்கும் அந்தப் படத்தை இயக்கிய மருதுபாண்டியன் பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவரால்தான் பாபிக்கு ‘நேரம்’ படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது மீண்டும் ஒரு படம் வெளிவராமல் இருக்க சில முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் பாபி சிம்ஹா. ‘மீரா ஜாக்கிரதை’ என்ற படத்தில் நடித்துவிட்டு, தற்போது அந்தப் படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஒரு வேளை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்திற்குச் சொன்னது போலவே, குறும்படமாக எடுத்து இப்போது பெரிய திரையில் திரையிட வருகிறார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார். தினசரி 2000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் நடித்துவிட்டு, இப்போது அப்படி ஒரு படத்தில் நடிக்கவேயில்லை என சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் இப்படி நடந்து கொள்வது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.