யு டியூப் வீடியோ இணையதளத்தில் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் நம்பர் 1 இடத்தை ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி…’ பாடல் பிடித்துள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த ‘3’ திரைப்பட பாடல் ஆல்பம் ஆன ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் பார்வை எண்ணிக்கையான 175 மில்லியன் (17 கோடியே 54 லட்சம் +) என்பதைக் கடந்து ‘ரௌடி பேபி’ வீடியோ பாடல் 177 மில்லியனைப் (17 கோடியே 74 லட்சம் +) பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
‘ரௌடி பேபி’ வீடியோ பாடல் கடந்த மாதம் 2ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே அந்தப் பாடல் தொடர்ந்து பல புதுப்புது சாதனைகளைப் படைத்த வண்ணம் இருந்தது.
யுவனின் மனதைக் கவரும் இசை, தனுஷின் குஷியான வரிகள், பிரபுதேவாவின் கொண்டாட்டமான நடன அமைப்பு, தனுஷ், சாய் பல்லவி ஆகியோரின் அசத்தலான நடனம், தனுஷ், தீ இருவரின் வசீகரிக்கும் குரல் என அனைத்துமே பாடலில் சிறப்பாக அமைந்தது.
தமிழ் ரசிகர்களைக் கடந்து, இந்திய ரசிகர்களை ரசிக்க வைத்து இப்போது உலக ரசிகர்களையும் தினமும் ரசிக்க வைக்கும் பாடலாக இந்தப் பாடல் அமைந்துவிட்டது.
தென்னிந்திய அளவில் முதலிடத்தைப் பிடிக்கும் திரைப்படப் பாடலாக இடம் பிடிக்க இந்தப் பாடலுக்கு இன்னும் சில லட்சம் பார்வைகளே தேவைப்படுகிறது. அதையும் அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் நிகழ்த்திவிடும்.
இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக 200 மில்லியன் பார்வைகளையும் பெற்று மேலும் ஒரு புதிய சாதனையை இந்தப் பாடல் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு டியூபில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களுமே தனுஷ் எழுதி பாடிய பாடல்கள் என்பது கூடுதல் தகவல்.
ஒய் திஸ் கொலவெறி பாடல் வீடியோ