ரேடியோ ஆர்ஜே-வாக இருந்து நகைச்சுவை நடிகராக மாறி, இன்று ‘எல்கேஜி’ படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாகவும் உயர்ந்திருப்பவ்ர் ஆர்ஜே பாலாஜி.
எல்கேஜி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் பிரபு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது ஐயனா, படத்தை வெளியிடும் சக்திவேலன், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜி பேசுகையில்,
“கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். எனக்கு அதில் முழு திருப்தி இல்லை.
சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து பணம் சம்பாதித்துவிடு என பலர் எனக்கு அட்வைஸ் செய்தார்கள்.
ஆனால், நான் எல்கேஜி படத்திற்கான கதையை எழுதி வந்தேன். சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் 57 சதவீத வாக்குப் பதிவுகள்தான் நடந்தது.
இளம் தலைமுறையினருக்கு யாருக்கு, ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
இந்த எல்கேஜி படம் பார்த்துவிட்டு கண்டிப்பாக பலரும் வாக்களிக்க வருவார்கள். இது ஒரு ‘ஸ்பூப்’ படமல்ல. ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களை கண்டிப்பாக யோசிக்க வைக்கும் படமாக இருக்கும்.
இது என்னுடைய தனிப்பட்ட விருப்பமான படம் அல்ல, ஆனால், சமுதாய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு படம்.
இந்தப் படத்தைக் கண்டிப்பாக எல்லோரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
எல்கேஜி படம் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது.