“உங்கள் அனைவரது ஆசிகளுடன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு என்னுடைய மூன்றாவது படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸுடனும், சிவகார்த்திகேயனுடனும் ஆரம்பிக்கிறேன்,” என இயக்குனர் பொன்ராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்த முதல் இரண்டு படங்களான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக சாதனை படைத்த படங்களாக அமைந்தன.
அந்தக் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்திருப்பது வினியோக வட்டாரங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்திற்கு தற்போது வினியோகஸ்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அடுத்து ‘தனி ஒருவன்’ என்ற மாபெரும் வெற்றியைத் தந்த மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பொன்ராம் – சிவகார்த்திகேயன் இணையும் படம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது.
இயக்குனர் பொன்ராமின் அறிவிப்புடன் வெற்றிக் கூட்டணியின் மீண்டும் ஒரு வெற்றிப் பயணம் இன்று ஆரம்பமாகிறது.