மெர்லின், ஒரு உதவி இயக்குனரின் உண்மைப் பேய்க் கதை !

ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘மெர்லின்’.

கீரா இயக்கும் இந்தப் படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். விஷ்ணுப்ரியன், அஸ்வினி, முருகதாஸ், லொல்லுசபா ஜீவா, சிங்கம்புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீரசந்தானம், வைசாலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனரான கீராவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“மெர்லின்’ ஒரு அழகான திரில்லர் பேய் கதை. 3 கால கட்டங்களில் நடக்கிற கதை. கதைப்படி ஹீரோ வெற்றி எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடுகிறார்.

தினேஷ் நடிக்க பவர்ஸ்டார் தயாரிப்பில் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. கதையின் கரு பிடித்து போவதால் ஒரு வாரத்திற்குள் முழுக் கதையையும் சொல்ல வேண்டும் என நடிகர் தினேஷ் கூறுவதால் கதை எழுத அறையிலேயே இருக்கிறார் வெற்றி.

அவர் கதை எழுதத் தொடங்கிய பின் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் அடிக்கடி வந்து போவதால் கவனம் சிதறுகிறது. இந்த அன்புத் தொல்லையில் இருந்து தப்பிக்க அந்த வீட்டில் கன்னிப் பேய் இருப்பதாக ஒரு பொய்க் கதையை அவிழ்த்து விடுகிறார் வெற்றி.

அதோடு அந்தக் கதைய வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டி சொன்னதாகவும், உண்மையை சொல்லிவிட்டதால் எந்த நேரமும், தான் அந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லியிருந்த பாட்டி திடீரென இறந்து போக, இந்த பேய்க் கதையைக் கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடை ந்து அந்த வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.

வெற்றி பொய்யாக உருவாக்கிய பேய் கதை நிஜமானதா… கதையை எழுதி முடித்தாரா… உண்மையில் பேய் என்ற ஒன்று இருக்கிறதா… இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மெர்லின் கதை.

வழக்கமான பேய்ப் படம் போல இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் கீரா.

Read Previous

திமிர் பிடித்த நடிகர் விக்ரம் – அமெரிக்காவிலிருந்து ஒரு குற்றச்சாட்டு

Read Next

Nambiar – Review