லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உள்ள படத்திற்கு ‘தர்பார்’ எனப் பெயர் வைத்து அதன் முதல் பார்வையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென வெளியிட்டுள்ளனர்.
‘தர்பார்’ என்றால் அரசவை என்று அர்த்தம். அது ஒரு பெர்சிய மொழி வார்த்தை. அதை முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அறிமுகப்படுத்தினார்கள்.
மன்னர், அமைச்சர்கள் அமர்ந்து அரசவை நடத்துவதுதான் ‘தர்பார்’. இந்தக் காலத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம் நடத்துவது போல என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவது இதுவே முதல் முறை. 11 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த்துடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
‘தளபதி’ படத்திற்குப் பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு இந்தப் படம் மூலம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்.
‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.