இயக்குனர் அமீரை அசத்திய ‘அச்சமில்லை அச்சமில்லை’

‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தலைப்பைப் பார்த்ததும் பழைய படம் பற்றிய செய்தி என்று நினைத்துவிட வேண்டாம்.

அந்தப் படத் தலைப்பில் இயக்குனர் அமீர் உதவியாளர் முத்து கோபால் இயக்கி, நடித்துள்ள படம்தான் இது.

மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் இந்தக் கதைக்கு கே.பாலசந்தர் இயக்கிய அந்தத் தலைப்புதான் மிகப் பொருத்தமாக இருக்கம் என்று அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

திருப்பூர் பகுதிகளில் சாயக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய படம்தான் ‘அச்சமில்லை அச்சமில்லை’.

இந்தப் படத்தை இயக்குனர் அமீரின் தயாரிப்பு நிறுவனமான டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தை வெளியிடுவது பற்றி அமீர் கூறியதாவது,

“என்னிடம் உதவியாளராக இருந்தவர் முத்து கோபால். என்னிடம் இந்தப் படத்தின் கதை எதையும் சொல்லாமல் அவராகவே தயாரித்து, இயக்கி நடித்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பின்தான் என்னை வந்து சந்தித்தார். படம் பற்றிக் கூறினார். நானும் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு பிரமாதமான படத்தை அவர் எடுத்திருப்பதைப் பற்றிப் பாராட்டினேன்.

மேற்கொண்டு படத்தைத் தயாரிக்கவும், வெளியிடவும் என்னிடம் கேட்டார். அதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி ஒரு படத்தை வெளியிடுவதிலும், நடிப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்.

திருப்பூர், கரூர் பகுதிகளில் சாயக் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை உள்ளது, உள்ளபடியே சொல்லியிருக்கிறார். முத்து கோபால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். அவர் பார்த்த, அனுபவித்த உண்மை விஷயங்கள் பலவற்றையும் படத்தில் வைத்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி,” என்கிறார் அமீர்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டது. விரைவில் முதல் பார்வை வெளியீடும், தொடர்ந்து இசை மற்றும் படத்தின் வெளியீடு இருக்கும்.

Read Previous

‘யமன்’ – ஆக்ஷன் ஹீரோவாக விஜய் ஆண்டனி

Read Next

‘ஜுலியும் 4 பேரும்’ – நாய் கடத்தலும், நகைச்சுவையும்…