‘ஜுலியும் 4 பேரும்’ – நாய் கடத்தலும், நகைச்சுவையும்…

வீட்டில் வளர்க்கும் மிருகங்களை வைத்து படம் எடுப்பதில் கூட கடும் கட்டுப்பாடுகள் வந்துவிட்ட நிலையில், ஒரு இடைவெளிக்குப் பிறகு நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘ஜுலியும் 4 பேரும்’.

ஐ.டி. நிறுவனத்தில் வேலை புரிந்த சதீஷ் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தான் சேர்த்து வைத்த பணத்தை வைத்து இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார்.

அமுதவாணன், ஜார்ஜ் விஜய், யோகானந்த் மற்ற மூன்று நாயகர்களாக நடிக்க அலியா மானசா நாயகியாக நடித்துள்ளார்.

சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களைப் பற்றிய படம் இது. படத்தில் நடித்துள்ள நாய் அமெரிக்கா பீகிள் வகையைச் சேர்ந்தது. படத்திற்காக இந்த நாயை வாங்கி தன் வீட்டில் வளர்த்து பாதுகாப்புடன் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சதீஷ்.

பீகிள் வகை நாய்கள் மிகவும் பாசக்கார நாய்களாம். தன்னை வளர்ப்பவர்கள் மீது அவ்வளவு பாசமாக இருக்குமாம்.

“இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட ‘ஜூலி’ என்கிற அதிர்ஷ்ட நாய் அமெரிக்காவிலிருந்து நாய் கடத்தல் கும்பலின் தலைவன் மூலமாக தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள ஒரு தொழிலதிபரிடம் அந்த நாய் விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் எனும் இளைஞரும், நண்பர்களாகின்றனர். வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறிகொடுக்கின்றனர்.

விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர்.

கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களைத் துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாகச் சொல்லும் படம்தான் ‘ஜுலியும் 4 பேரும்,” என்கிறார் இயக்குனர் சதீஷ்.

இந்தப் படத்தை குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகள் அனைவரும் ரசித்துப் பார்க்கலாம் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் படக் குழுவினர்.

Read Previous

இயக்குனர் அமீரை அசத்திய ‘அச்சமில்லை அச்சமில்லை’

Read Next

‘சாமி 2’ படத்தில் த்ரிஷா