இன்றைக்கு எப்படி அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்களோ, 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.
ஆனால், அப்போதெல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் கிடையாது. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் போதும், டீக்கடைகளில் வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருக்கும் போதும் ரஜினி, கமல் இருவரில் யார் சிறந்த நடிகர் ? என வாக்குவாதம் இல்லாமல் எந்த சந்திப்பும் முடியாது.
அந்த 80களின் ரஜினி, கமல் ரசிகர்களின் மோதலை ஒரு சுவாரசியமான படமாக ‘எங்கிட்ட மோததோ’ என்ற தலைப்பில் இயக்கி இருக்கிறார் ராமு செல்லப்பா.
‘சதுரங்க வேட்டை’ நாயகன் நட்ராஜ், ‘மூடர் கூடம்’ நாயகன் ராஜாஜ், ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராதாரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
“நட்ராஜ், ரஜினி ரசிகராகவும், ராஜாஜ் கமல் ரசிகராகவும் அப்படியே வாழ்ந்துள்ளார்கள்…இல்லை இல்லை…சண்டை போட்டுள்ளார்கள். இருவருமே கட்-அவுட் வரையும் ஓவியர்கள். ஒருவர் ரஜினி படங்களை மட்டுமே வரைவார், மற்றொருவர் கமல் படங்களை மட்டுமே வரைவார்.
சிறு வயதில் எங்கள் ஊரான திருநெல்வேலியில் நான் பார்த்த, கேட்ட பல சுவாரசியமான சம்பவங்களை இந்தப் படத்தில் வைத்திருக்கிறேன்.
நண்பர்கள், ரசிகர்களாக எதிரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் ஒரு பொது எதிரி வரும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
87ல் படத்தின் கதை நடக்கிறது. கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, ரஜினிகாந்த் நடித்த ‘மனிதன்’ ஆகிய படங்கள் அந்தக் காலக்கட்டத்தில் வந்தது. அந்த சமயத்தில் நடைபெற்ற சில அரசியல் விஷயங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு மாறுபட்ட படத்தைப் பார்க்கும் திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும்,” என்கிறார் இயக்குனர் ராமு செல்லப்பா.
‘எங்கிட்ட மோதாதே’ மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.