தமிழ்த் திரையுலகில் வெளியாகும் புதிய படங்களை சாட்டிலைட் டிவிக்களுக்கு விற்றுக் கொடுப்பதில் பல வருட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ‘சாட்டிலைட்’ ஸ்ரீதர்.
சில வருடங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டில் ‘அலிபாபாவும் அற்புத காரும்’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார். அது பற்றி அப்போதே பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.
“ஒரு கார், ஒரு பெண் இருவரை மையப்படுத்திய கதை. அந்தப் பெண்ணை கொலை செய்து, காரையும் மறைத்து வைத்து விடுகிறார்கள். அதன் பின் அந்தக் கார் அதுவாகவே பயணம் செய்து பெண்ணின் கொலைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையில் வரும் காருக்காக சில லட்சங்கள் செலவு செய்து வித்தியாசமான கார் ஒன்றையும் வடிவமைத்தோம்.
என்னுடைய படத்திற்கு மீண்டும் பைனான்ஸ் வாங்கி ஆரம்பிக்கலாம் என்று அணுகியபோதுதான் இதே கதையில் ‘டோரா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.
அது பற்றி தயாரிப்பாளர் கில்டு உள்ளிட்ட அமைப்புகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
என் வீட்டு மாடியில்தான் ‘டோரா’ படத்தைத் தயாரிக்கும் சற்குணத்தின் உதவியாளர்கள் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களிடம் இந்தக் கதை குறித்து விவாதித்திருக்கிறேன்.
அதனால், அவர்கள் மூலமாக கதை வெளியில் சென்றிருக்கலாம். என்னுடைய ‘அலிபாபாவும் அற்புத காரும்’ படத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்துள்ளேன்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் வரை செல்வேன்,” என ‘சாட்டிலைட்’ ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நயன்தரா நடிப்பில், இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள ‘டோரா’ படம் மார்ச் மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.