பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ராவின் டிவிட்டர் பதிவுகள்

தமிழ்நாட்டில் எந்த ஒரு போராட்டம் நடந்தாலும் அவற்றை திசை திருப்ப, திரையுலகம் பக்கமிருந்து யாராவது கை கொடுத்து கவனத்தைத் திருப்பி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஆனாலும், பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா நேற்று முதல் டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்ட கருத்துகள், பகிர்ந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அவர் எதற்காக மற்றவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றுகிறார், அதற்கான பின்னணி என்ன என்பது இன்னமும் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.

நள்ளிரவில் சில ஆபாச வீடியோக்களையும் அவர் பதிவிட விவகாரம் விஸ்ரூபமெடுத்தது.

நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் இன்றைய விவாதப் பொருளாக ‘சுசி லீக்ஸ்’ எனப் பெயர் வைத்து பகிரும் அளவிற்கு விஷயம் பரபரப்பாக இருந்தது.

ஒரு பக்கம் சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், மற்றொரு பக்கம் அவருடைய கணவர் கார்த்திக் குமார், சுசித்ரா கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.

திரையுலகத்தில் விசாரித்த வரையிலும் அதைத்தான் சொல்கிறார்கள். விவகாரம் மேலும் வளர்ந்தால் எத்தனை பேருடைய தனிப்பட்ட விஷயங்கள் வெளியில் வருமோ என்று வெளியில் தெரியாமல் சில முக்கிய நடிகர், நடிகைகளே சுசித்ராவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அதே சமயம், இன்று மதிய வேளையில் சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு ‘டிஆக்டிவேட்’ செய்யப்பட்டது.

இனிமேலும் எந்த விதமான பதிவுகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுசித்ராவின் பெயரிலேயே பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு அவற்றில் நடிகர், நடிகைகளின் ஆபாசப் புகைப்படங்கள் பதிவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்கள் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்திற்கும், ‘நெடுவாசல்’ போராட்டத்திற்கும் எந்த அளவிற்கு பயன்பட்டன, பயன்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அதே சமூக வலைத்தளங்களில் சமூகத்தையும், இளைஞர்களை சீரழிக்கும் விதத்திலும் தற்போது ஆபாச அரங்கற்றங்கள் நடந்து வருவது தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரும் தலைகுனிவு.

சுசித்ராவின் பகிர்தலுக்கு திரையுலகத்தில் இருந்து எந்த அளவிற்கு ஆதரவு வரும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் தங்களது புகைப்படங்கள் வந்துவிடுமோ என பிரபலங்கள் அஞ்சினாலும், மறு பக்கம் சுசித்ரா பதிவிட்டதன் காரணத்தைக் கண்டுபிடித்து அவரைத் துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இனி, சமுதாயத்திற்கும், இந்த மக்களுக்கும் கருத்துக்களைச் சொல்லும் முன் சுசித்ராவின் டிவிட்டரில் காணப்பட்ட சில நடிகர், நடிகைகள் தங்களை கண்ணாடி முன் பார்த்துக் கொள்ளுதல் நலம்…..

Read Previous

Mupparimanam – Review

Read Next

Vikram Vedha shoot resumes