தமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.
அவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.
1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.
அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.
1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.
அதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.
தொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.
2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.
கடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி,
ஆரம்பம் – 135 கோடி
வீரம் – 118
என்னை அறிந்தால் – 125
வேதாளம் – 152
விவேகம் – 206
விஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.
அஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.