“பிச்சைக்காரன், இறைவி, எங்கிட்டே மோதாதே” உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’.
பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
கிருஷ்ணா, கயல் சந்திரன், அறிமுக நாயகி நந்தினி, கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். வறட்சியால் உயிர்நீத்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் ‘கிரகணம்’ படத் தயாரிப்பாளர் சார்பாக ஒரு கணிசமான நிதி உதவி வழங்கப்பட்டது.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவா பேசும்போது, “ஒரு படத்தில் பணியாற்றும் நட்சத்திரங்கள் அனைவரும் படப்படிப்பு முடிவடைந்தவுடன் தங்களது பணி முடிவடைந்து விட்டது என ஒதுங்கிக்கொள்ளாமல், அந்தப் படம் ரிலீசாகும் நாள் வரை, மறுக்காமல் தங்கள் ஒத்துழைப்பை அந்தப்படத்திற்கு கொடுக்கவேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.
படத்தின் நாயகன் கிருஷ்ணா பேசும்போது, “இந்தப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் இளன் தான். இளனை நான் சந்திக்கும்போது அவருக்கு 21 வயது. இந்தப்படத்தின் கதையை வெறும் இருபது நிமிடம் மட்டுமே இயக்குனர் இளன் என்னிடம் சொன்னார்.. படத்தில் நான் அணியும் ஆடைகளை கூட எனக்கு பிடித்த மாதிரி என் சொந்த ஆடைகளையே அணிய சொல்லிவிட்டார்,” என்றார்.
இன்னொரு நாயகன் கயல் சந்திரன் பேசும்போது, “கிருஷ்ணாவுக்காவது இருபது நிமிடம் கதை சொன்னார். எனக்கோ டீ கொண்டு வரச்சொல்லி, அதை குடித்து முடிக்கும் அந்த பத்து நிமிடத்திற்குள் கதையை சொல்லிவிட்டார்.. இது ஒரு மல்டி ஸ்டாரர் கதை என்றதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் கொஞ்சமல்ல, நிறையவே சூடான பார்ட்டி. உதவியாளர்களை அவர் தலையில் கொட்டி வேலை வாங்குவதைப் பார்க்கும் போது எனக்கு கணக்கு வாத்தியார் பாடம் எடுக்கும் கிளாசில் இருப்பது போலவே தெரிந்தது. முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பில் கலந்துகொண்டது புதிய அனுபவமாக இருந்தது,” என்றார்..
‘பாகுபலி-2’ படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த கே புரடக்சன்ஸ் ராஜராஜன் பேசும்போது, “நாங்கள் கடந்த சில வருடங்களாக படம் தயாரிக்கலாம் என நினைத்து நல்ல துடிப்பான இயக்குனர்கள் யார் என தேடியபோது பல இடங்களிலும் இளன் என்கிற பெயர் அடிபட்டது. இப்போதுதான் அவரை பார்க்கிறேன். அவருடன் விரைவில் படம் பண்ணும் நேரம் வரும் என நம்புகிறேன்,” என்று கூறினார்.
படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், கே பிலிம்ஸ் நிறுவனர் சேரன் மற்றும் ராஜராஜன், நடிகர் ஆரி, ‘பட்டதாரி’ புகழ் அபி சரவணன், ‘அசத்தப்போவது யாரு’ இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.