டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘மாட்டுக்கார வேலன்’

எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படம் சுமார் 46 வருடங்கள் கழித்து மீண்டும் வெளிவர உள்ளது.

ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு இசை கே.வி. மகாதேவன்.

மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், தயாராகிக் கொண்டிருக்கிறது.

1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில் நுட்பத்துடன் உருவாகி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து சாதனை புரிந்த படம் இது.

கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதிய இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டான பாடல்கள்.

“தொட்டுக் கொள்ளவா, ஒரு பக்கம் பாக்குறா, பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா” ஆகிய இனிமையான காதல் சொட்டும் பாடல்களும், ‘சத்தியம் நீயே தர்ம தாயே, பட்டிக்காடா பட்டணமா” ஆகிய தத்துவப் பாடல்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான ‘மாட்டுக்கார வேலன்’ டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.

Read Previous

மே 19-ல் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

Read Next

தமிழில் முதல் வண்ணப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’

Most Popular