இந்தியத் திரையுலகம் என்றாலே உலக அளவில் ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே என்ற ஒரு மாயையை ஹிந்தித் திரையுலகினர் நீண்ட நாட்களாக ஏற்படுத்தி இருந்தனர்.
தென்னிந்தியாவிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே வரவேற்பார்கள். நாயகர்கள் வந்தால் அரசியல் செய்து அவர்களை விரட்டி விடுவார்கள். நாயகிகளுக்கு மட்டும் ரத்தினக் கம்பளம் விரிப்பார்கள்.
தென்னிந்திய இயக்குனர்கள் பெரிய திறமைசாலிகள் இல்லை என முடிந்த வரை ‘லாபி’ செய்வார்கள். மணிரத்னம், ராம் கோபால் வர்மா போன்ற சிலர் மட்டுமே அதற்கு விதி விலக்கு.
இனி, ஹிந்தித் திரையுலகினரின் அரசியல், லாபி, மாயை எதுவும் பலிக்காது. ‘பாகுபலி 2’ அந்த அனைத்து விஷயங்களையும் தகர்த்தெறிந்துவிட்டது.
‘பாகுபலி 2’ படம் 9 நாட்களில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டது என்பது உண்மை என்றால் இந்த வசூல் சாதனையை நாமும் சேர்ந்து கொண்டாடலாம்.
ஹிந்தியில் டப்பிங் படமாக வெளிவந்து 9 நாட்களில் 300 கோடி ரூபாயைக் கடந்து ஹிந்தித் திரையுலகின் டாப் ஹீரோக்களை இப்படம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தெலுங்கானா, ஆந்திராவில் சுமார் 200 கோடி ரூபாயும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் 200 கோடி ரூபாயும், மும்பையில் மட்டும் 100 கோடி ரூபாயும், வட இந்திய மாநிலங்களில் 200 கோடி ரூபாயும், மீதமுள்ள மதிப்பீட்டின் படி 100 கோடி ரூபாயும் அமெரிக்காவில் மட்டும் 100 கோடி ரூபாயும், மற்ற வெளிநாடுகளில் 100 கோடி ரூபாயும், என 1000 கோடியை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இன்னும் சில வாரங்கள் ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் இதே அளவிற்குத் தொடர்ந்தால் 2000 கோடியை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மற்ற டிஜிட்டல் உரிமைகள், சாட்டிலைட் டிவி உரிமை, சீரியல் உரிமை, புத்தக உரிமை இப்படி அனைத்தையும் சேர்த்தால் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூல் தொகை 2000 கோடியைத் தாண்டிவிடும்.
தியேட்டர் வசூலில் மட்டுமே 2000 கோடியைத் தாண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருந்தாலும் முதல் பாகத்தின் வசூலையும் சேர்த்தால் ‘பாகுபலி’ இரண்டு பாகங்களின் வசூல் 2000 கோடியை நிச்சயமாகத் தாண்டிவிடும்.