‘பாகுபலி 2’ படம் மிகப் பெரும் சாதனையை பல தளங்களில் ஏற்படுத்திய பின் அந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஒரு பேரார்வம் ஏற்பட்டுள்ளதில் வியப்பில்லை.
இத்தனை நாட்களாக தமிழ்த் திரையுலகில் இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரது படங்கள் ஏற்படுத்திய சாதனையை ‘பாகுபலி 2’ முறியடித்துவிட்டது.
‘பாகுபலி 2’ படத்தின் டிரைலர் வெளியான போது அது முந்தைய தமிழ்ப் படங்களின் சாதனைகளை முறியடித்தது. இந்திய அளவில் அந்தப் படம் தற்போது வசூலிலும் சாதனை மேல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகத்தில் இணைய தள, சமூக வலைத்தள பயன்பாட்டில் அஜித் ரசிகர்கள் எப்போதுமே முன்னணியில் இருப்பார்கள். ‘வேதாளம்’ படத்தின் டீசர் சாதனையில் அதை நிரூபித்தும் காட்டினார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு வெளிவந்த ‘தெறி, கபாலி’ படங்களின் டீசர் ‘வேதாளம்’ சாதனையை முறியடித்தது.
இப்போது அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ டீசர் மூலம் அந்தப் படங்களின் சாதனையை முறியடிக்க அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று இரவு 12 மணிக்கு ‘விவேகம்’ டீசர் வெளியாக உள்ளது.
வழக்கம் போல இன்று இரவு தூங்காமல் கண் முழித்து, காத்திருந்து ‘விவேகம்’ டீசரை பல சாதனைகளை நோக்கி பயணிக்க வைக்க அஜித் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
தமிழ்ப் படங்களின் டீசர் சாதனையில் ‘விவேகம்’ படம் புதிய சாதனையைப் படைக்கும் என தாராளமாக எதிர்பார்க்கலாம்.