கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆரம்பமாகும் ‘சங்கமித்ரா’

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்பம், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது.

உலகப் புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழா அடுத்த வாரம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் திரைப்பட விழாவின் ஆரம்ப நாள் இரவின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒருவராக ‘சங்கமித்ரா’ படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் ஸ்டுடியோஸ் இருக்கிறார்கள்.

அதனால், அன்று ‘சங்கமித்ரா’ திரைப்படத் துவக்க விழாவை உலகத் திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் நடத்த உள்ளார்கள்.

படத்தின் நடிகர்களான ஜெயம் ரவி, ஆர்யா, நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், தயாரிப்பாளர் முரளி ராமசாமி, இயக்குனர் சுந்தர். சி உள்ளிட்ட படக்குழுவினர் அதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

“சங்கமித்ரா’ படத்தின் கதை தேசிய மற்றும் சர்வதேச ரசிகர்களை ஈர்க்கக் கூடியது. படத்தின் துவக்கத்தில் சர்வதேச ரசிகர்களின் பங்கேற்பை பெறுவது உற்சாகமானது,” என அவர் கூறியுள்ளார்.

ஒரு தமிழ்ப் படத்தின் துவக்க விழா, கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

Read Previous

Vijay Television Awards telecast on May 21 & 28

Read Next

திறப்பு விழா – விமர்சனம்